Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மியான்மரில் இருந்து கடத்தப்பட்ட ரூ.45 கோடி போதைப்பொருள் அசாமில் பறிமுதல்

கவுகாத்தி: மியான்மரில் இருந்து கடத்தப்பட்ட ரூ.45 கோடி போதைப்பொருட்கள் அசாமில் பறிமுதல் செய்யப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் மணிப்பூர் மற்றும் மிசோரமில் பாதுகாப்புப் படையினர் ரூ.5.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மணிப்பூரின் நோனி மாவட்டத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அளித்த தகவலின் பேரில் அசாம் ரைஃபிள்ஸ் படையினர் நடத்திய சோதனையில், ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் ஆம்பெடமைன் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு, கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், மிசோரமின் கோலாசிப் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், ரூ.7.04 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த போதைப்பொருட்கள் அனைத்தும் அண்டை நாடான மியான்மரிலிருந்து கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் மாநில காவல்துறை நடத்திய அதிரடி சோதனைகளில் ரூ.45 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். மேலும் இரண்டு அடுத்தடுத்த சோதனைகளில், 1.5 லட்சம் யாபா மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.