சென்னை: தேவநாதன் யாதவ் இயக்குனராக இருந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.
தேவநாதன் யாதவுக்கு சொந்தமாக உள்ள 2,000 கிலோ தங்கத்தை வைத்தே தங்களுக்கு வட்டியுடன் பணத்தை திரும்ப அளிக்க முடியும் என்று பாதிக்கபட்டவர்கள் தரப்பு வாதம் செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த ரூ.300 கோடிக்கான சொத்து ஆவணங்களை ஆய்வு செய்ததில், பாதிக்கும் அதிகமான சொத்துகள் வில்லங்க சொத்துகள் என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக மனு அளித்தனர்.


