Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கு இன்று முதல் நிலை தேர்வு: தேர்வு மையங்களுக்கு செல்போன், வாட்ச்க்கு தடைவிதிப்பு

சென்னை: குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 90 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. தேர்வு மையங்களுக்கு செல்போன் எடுத்து வரவும், வாட்ச், மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவி தேர்வுகளான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி ஒரு பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28ம் தேதி வெளியிட்டது.

அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் குரூப் 1 தேர்வுக்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள் 1,25,726 பேர், பெண்கள் 1,12,501 பேர், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் அடங்குவர்.

இந்நிலையில் குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 797 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிக்க ஒரு அறைக்கு ஒருவர் வீதம் 797 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் குரூப் 1 முதல்நிலை தேர்வை 37,891 பேர் எழுதுகின்றனர். இதற்காக சென்னையில் 124 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லவும், மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்படியான பொருட்களை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.