Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டெல்டாவில் 4வது நாளாக பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

திருச்சி: டெல்டாவில் பல்வேறு இடங்களில் 4வது நாளாக நேற்றிரவும் பலத்த மழை கொட்டியது. கிழக்கு-மேற்கு காற்று இணையும் நிகழ்வு காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு 4வது நாளாக பல இடங்களில் பலத்த மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பிறகு அதிகாலை வரை சாரல் மழை பொழிந்தது. மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை லேசான மழை பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். அதிகாலையில் லேசான சாரல் மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பிறகு பாடாலூர், வேப்பந்தட்டை, குன்னம், அரும்பாவூர் பகுதிகளில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மழை தூறியது. கரூர், அரியலூர் மாவட்டங்களில் ஆங்காங்கே நேற்றிரவு மழை பெய்தது.

திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம், தில்லைநகர், உறையூர், பஞ்சப்பூர், ஏர்போர்ட், சத்திரம் பேருந்து நிலையம், ரங்கம், திருவெறும்பூர் பகுதிகளில் நேற்றிரவு 8 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பிறகு அதிகாலை வரை விட்டு விட்டு தூறியது. டெல்டாவில் பெரும்பாலான இடங்களில் இன்று வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. கத்திரி வெயில் காலத்தில் கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.