Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியை பழிதீர்த்து பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஆர்சிபி; நான் எப்போதும் ஒரு சிக்கனமான பந்துவீச்சாளர்: ஆட்டநாயகன் குர்னல் பாண்டியா பேட்டி

டெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 46வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 41, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34, அபிஷேக் போரல் 28, டூபிளசிஸ் 22 ரன் அடித்தனர். ஆர்சிபி பவுலிங்கில் புவனேஸ்குமார் 3, ஹேசல்வுட் 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய ஆர்சிபி அணியில் ஜேக்கப் பெத்தேல் 12, படிக்கல் 0, கேப்டன் ரஜத் படிதார் 6 ரன்னில் வெளியேற விராட் கோஹ்லி 51 ரன் (47பந்து) அடித்தார். குர்னல் பாண்டியா நாட் அவுட்டாக 47 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 73, டிம் டேவிட் 19 ரன் விளாச 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் ஏற்கனவே பெங்களூருவில் மோதிய போட்டியில் அடைந்த தோல்விக்கு ஆர்சிபி பழிதீர்த்துக்கொண்டது. குர்னல் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார். 10வது போட்டியில் 7வது வெற்றியை பெற்ற ஆர்சிபி பட்டியலில முதல் இடத்திற்கு முன்னேறியது.

வெற்றிக்கு பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் கூறுகையில், ``இது ஒட்டுமொத்த அணியின் செயல்திறனுக்கு கிடைத்த வெற்றி. இந்த பிட்சில் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் அருமை. சேஸிங்கின் போது பிட்ச் பற்றி நிறைய தெளிவைத் தருகிறது, அதற்கேற்ப நாங்கள் திட்டமிடுகிறோம். இந்த 160 ரன்கள் எளிதாகக் கிடைத்தன. ஆனால் 160 ரன்னில் எதிரணியை கட்டுப்படுத்துவது எளிதல்ல. எனவே அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் பெருமை சேர வேண்டும். அணியை வழிநடத்தும்போது அது மிகவும் நன்றாக இருக்கிறது. அணியில் பல சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள இது எனக்கு ஒரு வாய்ப்பு’’ என்றார்.

ஆட்டநாயகன் குர்னல் பாண்டியா கூறுகையில், ``கடின உழைப்பைச் செலுத்தி, அது நல்ல ரிசல்ட்டாக வரும் போது நன்றாக இருக்கும். 3 விக்கெட் இழந்தாலும், டிம் டேவிட், ஜிதேஷ் இருப்பதால், பார்ட்னர்ஷிப் உருவாக்க வேண்டும் என்ற எனது பங்கு தெளிவாக இருந்தது. மறுமுனையில் விராட் இருக்கும்போது, ​​அது எப்போதும் மிகவும் எளிதானது. நான் அவருக்கு நன்றி கூறுவேன். நான் எப்போதும் ஒரு சிக்கனமான பந்துவீச்சாளர். இது எனது 10வது சீசன். பல மாறுபாடுகளுடன் எனது பந்துவீச்சில் நான் நிறைய உழைத்துள்ளேன்’’ என்றார்.

15 ரன் குறைவாக எடுத்து விட்டோம்;

டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறுகையில், ``நாங்கள் 10-15 ரன் குறைவாக எடுத்துவிட்டதாக தோன்றுகிறது. முதலில் பிட்ச் பேட்டிங்கிற்கு கடினமாக இருந்தது. ஆனால் பனி வந்தவுடன் அது சிறப்பாக மாறியது. நாங்கள் ரன் வேகத்தை அதிகரிக்க முயற்சித்தோம். ஆனால் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம், ஒரு பேட்டர் கடைசிவரை நின்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கலாம்’’ என்றார்.

பிட்ஸ்... பிட்ஸ்....

* ஆர்சிபி அணியின் விராட் கோஹ்லி நடப்பு சீசனில் 10 போட்டியில் 6 அரை சதத்துடன் 443 ரன் எடுத்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றி உள்ளார். மும்பையின் சூர்யா 427, குஜராத்தின் சாய் சுதர்சன் 417 ரன்னுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

* நடப்பு சீசனில் வெளிமண்ணில் ஆடிய 6 போட்டியிலும் ஆர்சிபி வென்றுள்ளது.

* ஐபிஎல்லில் கோஹ்லிக்கு இது 61வது அரைசதமாகும். வார்னர் 62 அரைசதத்துடன் முதலிடத்தில் உள்ளார்.

* 11 ஐபிஎல் சீசன்களில் 400க்கும் அதிகமான ரன்கள் குவித்திருக்கும் முதல் வீரர் என்ற சாதனையை கோஹ்லி படைத்துள்ளார்.

* பவுலிங்கில் ஆர்சிபியின் ஹேசல்வுட் 18 விக்கெட்டுடன் பர்பிள் தொப்பியை வசப்படுத்தினார்.