Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டெல்லி மதராசி கேம்ப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: டெல்லி மதராசி கேம்ப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: மதராசி கேம்ப் என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசை பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

டெல்லி உயர் நீதிமன்றம், “மதராசி கேம்ப்” என்பது பராப்புல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட அனுமதியில்லாத கட்டிடம், ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மழைக்காலத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்படுகிறது. எனவே, டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியம் (DUSIB) சட்டம் மற்றும் டெல்லி சேரி மற்றும் ஜேஜே குடியிருப்பு இடமாற்றக் கொள்கை, 2015ன் கீழ் தகுதியான குடியிருப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, குடியிருப்பாளர்களின் மறுவாழ்வு மற்றும் இடமாற்ற தகுதியை மதிப்பீடு செய்ய ஒரு விரிவான கணக்கெடுப்பு, தகுதி தீர்மானக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்முறை அடிப்படையில், 370 குடியிருப்பாளர்களில் 215 பேர் தகுதியுடையவர்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளனர். தகுதியுடைய பயனாளர்களுக்கு டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுக்கான குடியிருப்பு யூனிட்டுகள், நரேலா ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், “மதராசி கேம்ப்” குடியிருப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளும் டெல்லி உயர் நீதிமன்றத்தால் கடந்த 9ம் தேதியிட்ட உத்தரவின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த உத்தரவின்படி, நேற்று முதல் “மதராசி கேம்ப்” பகுதிகளில் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “மதராசி கேம்ப்” பகுதியில் அனுமதியில்லாத கட்டிடங்களை இடிக்காமல் இருக்க குடியிருப்பாளர்களுக்கு இருந்த அனைத்து சட்ட வழிகளும் முழுமையாக முடிவடைந்துவிட்டன.

தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உத்தரவின்படி, டெல்லியில் உள்ள “தமிழ்நாடு இல்ல” அலுவலகம், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, “மதராசி கேம்ப்” குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிநடத்தலின் கீழ், “மதராசி கேம்ப்” குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும். இந்த உதவிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.