டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்புவதாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கடந்த 20ம் தேதி மற்றும் இன்று காலை நடைபெற்ற கொலீஜிய கூட்டம் அடிப்படையில் இத்தகைய உத்தரவை பிறப்பிப்பதாக உச்சநீதிமன்ற கொலீஜியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது எரிந்த நிலையிலான பலகோடி ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், ஊழல் புகார் விசாரிக்கப்படுவதற்காக கமிட்டி அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த பரிந்துரைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பார் கவுன்சில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவிற்கு உயர்நீதிமன்றத்தின் பார் கவுன்சில் சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்த நிலையில், யஷ்வந்த் வர்மாவுக்கு எந்தவொரு நீதி பொறுப்பும் வழங்கப்பட கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இது போன்ற எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதற்கான பரிந்துரையும் உச்சநீதிமன்ற கொலீஜியம் தெரிவித்துள்ளது.
