Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு நீதிபதிகள் கண்டனம்

* விசாரணை என்ற பெயரில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது.

* குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஆனால், இந்த வழக்கில் குற்றத்தில் உடந்தையாக இருந்த பலரையும் அமலாக்கத்துறை சாட்சியாக மாற்றி உள்ளது.

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரான கவிதாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தனி நீதிபதியின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடந்ததாக கூறி வழக்கு தொடர்ந்து அமலாக்கத்துறை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, உட்பட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களை கைது செய்தது. இந்த வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகளும் பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவருமான கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் சிபிஐயும் அவரை கைது செய்தது. இந்த இரு வழக்கிலும் ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கவிதா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக தாக்கல் செய்திருந்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ கவிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகளுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதில்,\\”ஒரு ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது கீழமை நீதிமன்றங்களில் விரிவான வாதங்கள் என்பது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக இந்த வழக்கின் விசாரணை என்பது தற்போது முடிய கூடியது கிடையாது என்று விசாரணை அமைப்புகளாகிய நீங்களே பிரமாணப் பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது உங்களது எந்த ஒரு வாதத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்க விரும்பவில்லை. குறிப்பாக டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கு விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியோரின் விசாரணை நியாயமான கோணத்தில் நடக்கிறதா என்றால் அது கேள்வியாக தான் உள்ளது. குறிப்பாக விசாரணை அமைப்புகள் ஒருதலை பட்சமாக நடந்து கொள்ள முடியாது என்று காட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘விசாரணை என்ற பெயரில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது. இதனை ஏற்கனவே பல தருணங்களில் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெளிவுபடுத்தி உள்ளது. அதுசார்ந்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு என்று சில சலுகைகள் விசாரணை மற்றும் ஜாமீன் வழங்குதல் ஆகியவற்றில் இருக்கும்போது ஏற்கனவே சில வழக்குகளில் அது நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற சூழலில் தனி நீதிபதி ஜாமீனை மறுக்கும் விவகாரத்தை அதனை அவர் தவறாக கையாண்டிருக்கிறார். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஆனால், இந்த வழக்கில் குற்றத்தில் உடந்தையாக இருந்த பலரையும் அமலாக்கத்துறை சாட்சியாக மாற்றி உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் எம்.பி, எம்எல்ஏ, முதல்வர், துணை முதல்வராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அமலாக்கத்துறை வக்கீல் வாதாடினார். அதேபோல் ஜாமீன் கிடைக்கும் உரிமையும் மற்றவர்களை போல் அவர்களுக்கும் உள்ளது. டெல்லி மதுபான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் எம்.எல்.சி. கவிதாவுக்கு ஜாமீன் வழங்குகிறோம். இந்த இரண்டு அமைப்புகளிலும் தலா ரூ.10 லட்சத்தை பிணைத் தொகையாக கவிதா செலுத்த வேண்டும்.

விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாட்சியங்களை கலைக்க கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் திகார் சிறையில் இருந்த கவிதா வெளியில் வந்தார்.