Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரூ.1 கோடி கேட்டு அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான எஸ்பி வேலுமணிக்கு ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜூலை 30ம் தேதி முடிவதற்குள் கோவையில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது. நாங்கள் உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய நபர்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு பணம் வேண்டும். போலீஸ் டிபார்ட்மென்டில் கூட நம்ம ஆளுங்க இருக்கிறாங்க. உன்னிடம் நிறைய கருப்பு பணம் இருக்கு. அதுக்கு எங்களிடம் ஆதாரம் இருக்கு. ரூ.1 கோடி பைல வச்சு, நா சொல்ற இடத்துக்கு வந்து வச்சுடு. நீ வரலாம் இல்லைனா உன்னோட டிரைவர் வரலாம். பணப்பையை பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை (25.05.25) இடத்தில் வைக்கவும்.

காளப்பட்டி-வெள்ளாணைப்பட்டி ரோட்டில் கலிய பெருமாள் குட்டை கிட்ட குப்பைமேட்டுல பணப்பையை வச்சுட்டு நீ போயிடலாம். என்னோட ஆளுங்க அந்த பையை எடுத்துப்பாங்க. உங்க பையில எந்த ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைசையும் வச்சுக்காதீங்க. 3 நாட்களுக்குப் பிறகு, அதே பையில் அதே இடத்துல உங்க இமெயில் ஐடியுடன் ஒரு ரகசிய குறியீட்டை பெறுவீர்கள்.இப்படிச் செய்தால் எங்க பக்கத்துல இருந்து எந்தப் பிரச்னையும் வராது. நீங்க போலீசுக்கு போனாலோ, எங்களைப் பிடிக்க முயற்சித்தாலோ உங்க குடும்பத்துல 3 பேரை 3 மாதங்களுக்குள் கொல்வோம். இது வெறும் மெசேஜ் இல்ல, இது எச்சரிக்கை.

இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது. மேலும், கடிதத்தின் பின் பக்கத்தில் கூகுள் மேப் வரைபடம் ஒன்றும், அதில் ‘டிராப் தி பேக்’ என்றும் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து புறநகர் கோவை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கடிதம் எங்கிருந்து வந்தது. யார் அனுப்பினார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.