Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு விழுப்புரத்தில் ஆய்வு!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல், மழை பாதிப்பை ஒன்றிய அரசின் குழு ஆய்வுசெய்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்ததால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வீடுகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் புகுந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் புயல் பாதிப்புகளுக்காக இடைக்கால நிவாரணமாக 2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2ம் தேதி ஒரு கடிதம் எழுதினார். மேலும் ஒன்றிய அரசின் பல்துறை குழுவை அனுப்பி சேத விவரங்களை கணக்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து தமிழக வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட ஒன்றியக்குழுவினர் நேற்று மாலை சென்னை வந்த நிலையில், தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பால் ஏற்பட்ட பேரழிவிற்கு தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கூறி அதற்கான முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அவர்களிடம் அளித்தார். மேலும், விரைந்து பரிந்துரை செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றிய குழு இன்று ஆய்வு செய்கிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். புயல் காரணமாக பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்த நிலையில், விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. மழையால் நெல்மூட்டைகள் சேதமடைந்தது குறித்து ஒன்றிய குழுவிடம் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வருவாய்த்துறை செயலாளர் அமுதா, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.