ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு; ஆலங்குடி அரசு கல்லூரி திறப்பு எப்போது? மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் வகுப்புகள் நடந்து வருகிறது. இக்கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கு கீழாத்தூர் சமத்துவபுரம் அருகில் 12 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்லூரியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், அலுவலகம், முதல்வர், துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்களின் அறைகள், ஆவணக் காப்பகம், நூலகம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 50 ஆயிரம் சதுர அடியில், ரூ.12.40 கோடியில் 2 அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
கட்டிடத்தில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் எப்போது திறக்கப்படும் என தெரியவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, “கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு இக்கல்லூரி திறக்கப்படும். அதன் பிறகு, கல்லூரி செயல்படும்” என்றனர். இக்கல்லூரிக்கு பிற பகுதியில் இருந்து மாணவ,மாணவிகள் வந்து செல்லும் வகையில் ஆலங்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். மேலும், கல்லூரிக்கான சுற்றுச்சுவரையும் உடனே கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


