Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசைக் கண்டித்து வயநாட்டில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவை ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்தது மற்றும் போதிய நிவாரண நிதி ஒதுக்காததை கண்டித்து இன்று கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தப்பட்டு வரும் 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்தால் வயநாடு மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 450க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது தவிர ஏராளமானோர் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டது.

ஏராளமானோர் தற்போதும் நிவாரண முகாம்களில் தான் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நிவாரண உதவி அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேரள அரசு கோரிக்கை விடுத்தது. மேலும் நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை கேரள அரசின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை. பிரதமர் மோடியும், ஒன்றிய குழுவினரும் நேரில் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்ற பின்னரும் இதுவரை கேரளாவுக்கு நிவாரண நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்தநிலையில் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வயநாடு மாவட்டத்தில் இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இதனால் வயநாடு மாவட்டம் முழுவதும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் எந்த வாகனங்களும் வயநாடு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவது தெரியாமல் வயநாட்டுக்கு சுற்றுலா வந்த பயணிகள் மாவட்டத்தின் எல்லையிலேயே காத்துக் கிடக்கின்றனர். இன்று மாலை 6 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இதற்கிடையே கல்பெட்டா, சுல்தான் பத்தேரி, வைத்திரி, லக்கிடி உள்பட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் உள்பட போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இங்கிருந்து கர்நாடகா, தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்களுக்கு செல்லும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வயநாட்டுக்கு வரும் கேரள அரசு, தனியார் பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.