Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை பேச்சு ம.பி. பாஜ அமைச்சர் குன்வர் விஜய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் இந்திய அரசு தரப்பில் நாட்டுமக்களுக்கு விளக்கமளித்தவர்களில் ஒருவர் கர்னல் சோபியா குரேஷி ஆவார். இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கர்னல் சோபியா குரேஷியை ‘‘பாகிஸ்தானின் மகள். பயங்கரவாதிகளின் சகோதரி” என்று அம்மாநில பாஜ அமைச்சர் குன்வர் விஜய் ஷா தெரிவித்திருந்த கருத்தானது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது. குறிப்பாக அமைச்சரின் கருத்துக்கள் ஆபத்தானவை என்றும், அதிகாரியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆயுதப்படைகளையும் இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் அப்போது தெரிவித்திருந்தது குறிப்பிட்டுள்ளது .இதற்கிடையில் குன்வர் விஜய் ஷா தனது எக்ஸ் கணக்கில் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கிடையே போலீசார் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,‘‘அமைச்சர் குன்வர் விஜய் ஷா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமில்லாமல், அவரது அரசியல் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக ரிட் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே அதனை அவரச வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று முறையிட்டார்.

இதையடுத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பிறப்பித்த உத்தரவில்,‘‘கர்னல் சோபியா குரேஷி விவகாரத்தில் ஒரு அமைச்சராக இருக்கும் நபர் பொறுப்புடன் பேசி இருக்க வேண்டும். உச்சரிக்கும் ஒவ்வொரு வாக்கியமும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனை தான் நங்கள் உட்பட அனைவரும் எதிர்பார்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் தற்போது இடைக்காலமாக எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. நீங்கள் ஏன் முதலில் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தீர்கள், உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கேளுங்கள். அதனை அவர்கள்பரிசீலனை செய்வார்கள். இருப்பினும் இதுதொடர்பான வழக்கை நாளை (இன்று) பட்டியலிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளும்’’ என்று கடும் கண்டனத்துடன் உத்தரவிட்டார்.