Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விளம்பரப்படுத்தப்பட்ட மாநகரப்பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , இன்று (04.06.2025) சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட மாநகர் பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் வழியில் நல்லாட்சி நடத்திக் கொண்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

அதில் கூட்டுறவுத்துறையின் வாயிலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று உரிய பயன்களை வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் 1904-ல் திருவள்ளூவர் மாவட்டத்தில் “திரூர்” என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் கூட்டுறவுத்துறை, தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது பெருமைக்குரியதாகும்.

மேலும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் விவசாயிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தார். அவ்வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் கூட்டுறவுத்துறையின் வாயிலாக விவசாயிகளுக்கு தேவையான எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி, விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறது.

கூட்டுறவுத்துறையின் மூலம் பயிர்க்கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, நகைக்கடனுதவி, சுய உதவிக்குழு கடனுதவி, சிறு வணிக கடனுதவி, மகளிர் தொழில்முனைவோர் கடனுதவி, பணிபுரியும் மகளிர் கடனுதவி, ஆதரவற்ற பெண்களுக்கான கடனுதவி, மத்திய கால கடனுதவிகள், பண்ணை சாரா கடனுதவிகள், தானிய ஈட்டு கடனுதவிகள், டாப்செட்கோ கடனுதவிகள், டாம்கோ கடனுதவிகள், தாட்கோ கடனுதவிகள், வீட்டு வசதி கடனுதவிகள், வீட்டு அடமான கடனுதவிகள், வாகன கடனுதவிகள், நாட்டுப்புற கலைஞர்களுக்கான கடனுதவிகள், மாற்றுத்திறனாளி கடனுதவிகள், சம்பள கடனுதவிகள், நுகர்வோர் கடனுதவிகள், காலி வீட்டுமனை வாங்க கடனுதவிகள் மற்றும் இதர கடனுதவிகள் என மொத்தம் 34 வகையான கடனுதவிகள் கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், தனிநபரின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாகவும் சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக நலிவடைந்த பிரிவினருக்கு கைகொடுத்து தூக்கிவிடும் துறையாகவும் கூட்டுறவுத்துறை விளங்கி வருகிறது.

அதேபோன்று, குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்திடும் வகையில், தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுத்துறையின் பதிவாளர் அலுவலகம், மண்டல மற்றும் சரக அலுவலகங்கள், மின் அலுவலகமாக (e-Office) மாற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடனாளிகளின் நிதிச்சுமையை குறைத்திடும் வகையில், கூட்டுறவு வங்கி/ சங்கங்களில் நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ள, பண்ணை சாரா கடன்களை வசூல் செய்திட தமிழக அரசால் சிறப்பு கடன் தீர்வைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களையும் கூட்டுறவுத்துறையின் சேவைகள் சென்றடையும் வகையில் கூட்டுறவு வங்கி/ சங்கங்களில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடன் விண்ணப்பங்கள் Online வாயிலாக சமர்ப்பித்திட ஏதுவாக கூட்டுறவு எனும் செயலியும் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.  இந்தியாவில் முன்னோடி திட்டங்களை அறிவிக்கின்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்துப்படும் சேவைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநகர் பகுதியில் இயங்கி வரும் 200 பேருந்துகளில் கூட்டுறவு சேவைகள் குறித்து விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் முதற்கட்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட மாநகர் பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவே நாட்டுயர்வு, என்ற அடிப்படையில், கூட்டுறவுத்துறை விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் உற்ற துறையாக திகழ்ந்து வருகிறது. மக்களுக்கான வங்கியும், கூட்டுறவு வங்கியே ஆகும். கூட்டுறவுத்துறையினை பொதுமக்கள், விவசாயிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவது மட்டுமன்றி, கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர்.க.நந்தகுமார்.கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) சா.ப.அம்ரித்., கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் முனைவர்.க.சொ.இரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.