Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றதாகி விட்டது: ராகுல் காந்தி

டெல்லி: பெரு நகரங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்தினருக்கு 100 ஆண்டுகால சேமிப்பு தேவையாக உள்ளது. அதுவே ஏழைகள் என்றால் வாய்ப்பே இல்லை என்ற நிலையே உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மும்பை மாநகரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கள் வருவாயில் ஆண்டுக்கு 30 சதவீத சேமிப்பு என 109 ஆண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிப்பதாக வெளியாகி உள்ள செய்தியை சுட்டிக்காட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் கூறியதாவது;

வீடுகளின் விலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குறிப்பாக பெரிய நகரங்களில் வீடு வாங்குவது என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கும்கூட எளிதல்ல. அவர்கள், தங்களின் ஆண்டு வருமானத்தில் 30 சதவீதத்தை 109 ஆண்டுகளுக்கு சேமித்தால் மட்டுமே மும்பையில் வீடு வாங்க முடியும். பெரிய நகரங்களில் வாய்ப்புகளையும், வெற்றிகளையும் தேடிக் கஷ்டப்பட்டு உழைக்கிற பெரும்பாலான மக்களின் நிலைமை இதுதான். நடுத்தர வர்க்கத்தினருக்கு இவ்வளவு சேமிப்பு எங்கிருந்து வரும். அதுவும் ஏழைகளுக்கு வீடு வாங்குவது என்பது எட்டாகனியாகி விட்டது.

நிறைய இதயங்களில், ஒரு நாள் நமக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் என்ற ஒரு கனவு இருக்கிறது. ஆனால் அந்த 'ஒரு நாள்' நடுத்தர வர்க்கத்தினருக்குக்கூட 109 வருடங்களுக்குப் பிறகே வரும் எனும்போது, ஏழைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஏழைகள் கனவு காணும் உரிமையை இழந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அடுத்த முறை யாராவது மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களை உங்களிடம் கூறும்போது, உங்கள் உள்நாட்டு பட்ஜெட் பற்றிய உண்மையை அவர்களுக்குக் காட்டுங்கள். மேலும், இந்தப் பொருளாதாரம் யாருக்காக என்று கேளுங்கள்? என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.