Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கும் மக்களுடன் முதல்வர் மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனைத்து எம்.பி, எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியையும், 15ம் ேததி திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக, மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் செல்லும் வகையில் 2023 டிசம்பர் 18ம் தேதி தொடங்கப்பட்ட \”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டம் முதல்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பை அடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு, வரும் 11ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் நான் தொடங்கி வைக்கிறேன். அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார்கள். மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் வரும் 11ம் தேதி நடக்கும் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் கலந்துகொண்டு சிறப்பு சேர்க்க வேண்டும்.

அதேபோன்று, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. 14,40,351 மாணவ, மாணவியர் பயன்பெறுகின்றனர். பல்வேறு ஆய்வுகளின் மூலமும், தமிழ்நாடு மாநில திட்டக் குழு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதிப்பீடு செய்ததன் அடிப்படையிலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. சத்தான உணவு வழங்குவதன் காரணமாக பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகையும் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள், காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட்செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதை கண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருவதாக திட்டக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எனவே கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் காமராஜர் பிறந்த நாளான வரும் 15ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் அதை தொடங்கி வைக்க உள்ளேன். அன்றைய தினம் எம்பி, எம்எல்ஏக்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட ஊரகப் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.