Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

இனி சென்னையில் இருப்பதை விடவும் மாவட்டங்களில் அதிக நாட்களை அமைச்சர்கள் செலவிடவேண்டும்: வேட்பாளர் யார் என்பதை தலைமை முடிவு செய்யும், மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை விடவும் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிட வேண்டும். வேட்பாளர் யார் என்பதை தலைமை முடிவு செய்யும் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம் தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க வேண்டும்.

தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.  பாஜ தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜ கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பாஜ கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.

நாம் எல்லா காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம் தான். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல்-மிரட்டல்- உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்கு தெரியும். எனவே, பாஜவின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்.

அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து பகுதிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாக செல்ல வேண்டும். வேட்பாளர் யார் என்பதை தலைமைக்கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை.

பவள விழாவைக் கொண்டாடிய கழகம், ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்க காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்கு காரணம், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.