Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை.. போராட்டத்தில் பார்வை பறிபோனவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணை!!

சென்னை: சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வன்முறையில் கண்பார்வை பறிபோனவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2017ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது போலீசார் கூட்டத்தை கலைத்த போது வன்முறை ஏற்பட்டது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியை விமலா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், ஜல்லிக்கட்டு போரட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறை தாக்கியதில் தனது மகன் கார்த்திக்கின் இடது கண் பாதித்து பார்வை பறிபோனதாகவும், பார்வை பறிபோன தனது மகனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி காவல்துறையால் தாக்கப்பட்டதில் பார்வை பறிபோனதற்கான மருத்துவ ஆவணங்கள் உள்ளதாகவும், இழப்பீடு வழங்குவது அரசின் கடமை என்றும் வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத், போராட்டக்காரர்கள் வீசிய கற்களால் தான் கண் பார்வை பறிபோனதாக வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பார்வை பறிபோன இளைஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 12 வாரங்களில் இழப்பீட்டு தொகையை தமிழ்நாடு அரசு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.