Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் இன்டர்லாக் சிக்னல் பணிகள் தீவிரம்; தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 23 தினங்கள் ரத்து: தென்மாவட்ட ரயில்கள் தாமதமாக வாய்ப்பு

நெல்லை: சென்னை தாம்பரத்தில் இன்டர்லாக் சிக்னல் பணிகள் நடைபெற உள்ள நிலையில், தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளன. தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் 23 தினங்கள் ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்டர்லாக் சிக்னல் பணிகள் இம்மாதம் 23ம்தேதி முதல் தொடர்ச்சியாக நடக்க உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை தாம்பரம் செல்லும் பல்வேறு ரயில்கள் பகுதி தூரம் ரத்து, ஒரு சில ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, மாற்று வழியிலும் இயக்கப்பட உள்ளன.

அந்த வகையில் பராமரிப்பு பணிகள் நடக்கும் நாட்களில் வண்டி எண் 20665 - 20666 நெல்லை - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே புறநகர் ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும். சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக எழும்பூர் செல்லும். தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரசை பொறுத்தவரை வரும் ஜூலை 23ம்தேதி முதல் ஆகஸ்ட் 14ம்தேதி வரை 23 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

செந்தூர் எக்ஸ்பிரசை பொறுத்தவரை வரும் ஆகஸ்ட் 14, 15, 16 ஆகிய தேதிகளில் திருச்செந்தூரில் இருந்து விழுப்புரம் வரை மட்டுமே செல்லும். ஆகஸ்ட் 17ம்தேதியன்று செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம் என மாற்று வழியில் சென்னை எழும்பூர் செல்லும். இரவு நேரங்களில் இயக்கப்படும் நெல்லை, பொதிகை, அனந்தபுரி, பாண்டியன், முத்து நகர், சிலம்பு உள்ளிட்ட ரயில்கள் வரும் 23ம்தேதி முதல் தாம்பரம் இன்டர்லாக் பணிகள் முடியும் வரை 20 முதல் 30 நிமிடங்கள் வரை புறநகர் பகுதியில் தாமதமாக இயக்கப்படும். எண்.22658 நாகர்கோவில் - தாம்பரம் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பதிலாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும்.

வண்டி எண்.20683 தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரயிலானது வரும் 23ம்தேதி முதல் ஆகஸ்ட் 13ம்தேதி வரை ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து புறப்படும். அதாவது தாம்பரம் - விழுப்புரம் இடையே அந்த ரயில் பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக வண்டி எண்.20684 செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில், வரும் 22ம்தேதி முதல் ஆகஸ்ட் 12ம்தேதி வரை திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் செங்கோட்டையில் இருந்து விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். விழுப்புரம் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு எக்ஸ்பிரஸ்களின் இயக்கத்திலும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எனவே தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் செல்லும் பயணிகள் வரும் 23ம்தேதி தொடங்கி, ஆகஸ்ட் 14ம்தேதி வரை ரயில்கள் இயக்கம் குறித்த முழு விபரங்களை அறிந்து கொண்டு பயணிக்குமாறு தெற்கு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.

இன்று சிறப்பு ரயில் ரத்து

இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாக காரணங்களை கருத்தில் கொண்டு நேற்று நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை(06012) ரத்து செய்தது. அதேபோல் இன்று 15ம் தேதியன்று சென்னையில் இருந்து காலை 7.45 மணிக்கு நாகர்கோவிலுக்கு வரும் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.