சென்னை : கூட்டுறவுகளின் சீரிய செயல்பாடுகளினால் ஏழை, எளிய மக்கள் சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டு, அவர்களையும் உள்ளடக்கிய சமூக அமைப்பாக தமிழக கூட்டுறவுகள் சிறப்பு பெற்றுள்ளன. கூட்டுறவின் மகிமையைக் கொண்டாடும் வகையிலும், சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு நாளைக் கொண்டாடும் வகையிலும், கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களால் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக ஜூலை 6, 2025 அன்று காலை 5.30 மணிக்கு சென்னை தீவுத்திடலில் தொடங்கி மாரத்தான் (COOP-A-THON) நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு 18 வயது முதல் 40 வயது வரை உள்ளோர்க்கு ஒரு பிரிவாகவும், 40 வயதிற்கு மேற்பட்டோர்க்கு இன்னொரு பிரிவாகவும், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெறவுள்ளது. இம்மாரத்தானில் கலந்து கொள்ளும் ஆண், பெண் உள்ளிட்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பதக்கம், சான்றிதழ், டி-ஷர்ட் மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படும். மேலும், முதல் பரிசாக ரூ.30,000/-ம், இரண்டாம் பரிசாக ரூ.20,000/-ம், மூன்றாம் பரிசாக ரூ.10,000/-ம் வழங்கப்படும்.மாரத்தானில் கலந்து கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்களும் https://www.tncu.tn.gov.in/marathon/register என்ற இணையதளம் வழி நுழைவுக் கட்டணமாக ரூ.100/- செலுத்தி பதிவு செய்து மாரத்தானில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


