Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பல சவாலான பணிகளுடன் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பை முடிக்க 28 ஆண்டுகள்: ரயில்வே சாதித்தது எப்படி?

கத்ரா: காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் செனாப் ஆற்றின் குறுக்கே 359 அடி உயரத்தில் உலகின் உயரமான ரயில் பால த்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மொத்தம் 272 கிமீ தூரம் கொண்ட இந்த ரயில் இணைப்பு திட்டம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சவாலான பணிகள் எப்போது, எப்படியெல்லாம் முடிக்கப்பட்டது என்பது குறித்து வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது: உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் கடந்த 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2005 ஏப்ரலில் 55 கிமீ நீளமுள்ள ஜம்மு உதம்பூர் இடையேயான பாதை நிறைவடைந்தது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி அரசு கவனம் செலுத்தி 2008 அக்டோபரில் 68 கிமீ நீளமுள்ள அனந்த்நாக்-மஜோம் ரயில் இணைப்பை நிறைவு செய்தது.

இதைத் தொடர்ந்து, 2009ல் 32 கிமீ நீளமுள்ள மஜோம்-பாரமுல்லா ரயில் இணைப்பு பணிகள் முடிக்கப்பட்டு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. எனவே மக்கள் பாரமுல்லாவில் இருந்து அனந்த்நாக் வரையிலும் ரயில் சேவையை பயன்படுத்தினர்.அடுத்ததாக, 2009 அக்டோபர் இறுதிக்குள் ஜம்மு நோக்கி அனந்த்நாக்கில் இருந்து குவாசிகண்ட் வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. ஜூன் 2013ல் குவாசிகண்டிலிருந்து பனிஹால் வரை ரயில் இணைப்பு பணிகள் முடிக்கப்பட்டன. இதில் 11.215 கிமீ நீளமுள்ள பிர்பஞ்சால் சுரங்கப்பாதையும் கட்டப்பட்டது.

சுமார் ஒருவருடத்திற்கு பிறகு 2014 ஜூலையில் ஜம்மு அருகே உள்ள உதம்பூரில் இருந்து கத்ரா வரையிலான பாதை செயல்பாட்டிற்கு வந்தது. இதன் பின் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த போது, பனிஹால், சங்கல்தன், கத்ரா, உதம்பூர் இடையேயான ரயில் இணைப்பு மட்டுமே முடிக்கப்பட்ட வேண்டியிருந்தது. பனிஹால் முதல் சங்கல்தன் வரையிலான இணைப்பு 2 கட்டங்களாக நிறைவு செய்யப்பட்டன. 28 ஆண்டுகள் கழித்து தற்போது 272 கிமீ உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* குதிரை, கோவேறு கழுதைகள் உதவின

செனாப் ரயில்வே பாலம் புதிய இந்தியாவின் பொறியியலின் புதிய சகாப்தம் என பாஜ அரசு புகழ்ந்து வருகிறது. இப்பாலத்தை கட்டிய ஆப்கான்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் எனும் நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘செனாப் பாலம் இமயமலையின் செங்குத்தான சரிவுகளால் சூழப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது. முதலில் அந்த இடத்தை அடைவதே எங்களுக்கு மிகவும் சவாலான பணியாக இருந்தது. முதலில் அங்கு எந்த சாலையும் இல்லை. சாலை அமைப்பதற்கான கட்டுமான பொருட்களை குதிரைகள், கோவேறு கழுதைகளில் மட்டுமே கொண்டு செல்ல முடியும். அதைத் தவிர வேறு வழியில்லை. எனவே முதலில் குதிரைகள், கோவேறு கழுதைகள் மூலம் அந்த இடத்தை அடைந்து அங்கு தற்காலிக சாலைகள் அமைத்த பின்னரே மற்ற கட்டுமானங்களை மேற்கொண்டோம்’’ என்றனர்.

* செனாப் பாலத்தின் டிசைனர் மாதவி லதா யார்?

இந்திய அறிவியல் கழகத்தின் சிவில் பொறியியல் துறையில் பேராசிரியராகவும், பாறைப் பொறியியல் மற்றும் புவி தொழில்நுட்பத் துறையில் நிபுணரான மாதவி லதா, கடந்த 2005ம் ஆண்டு முதல் சுமார் 17 ஆண்டுகள் செனாப் ரயில் பாலத்தின் திட்டத்தில் பங்கேற்று ஆலோசனைளை வழங்கினார். இந்த பாலத்தின் திறப்பு விழாவின் போது, அவரது பணிகளை பாராட்டி ‘டிசைன்-ஆஸ்-யு-கோ’ என்று பலரும் அவரை பாராட்டினர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மாதவி லதா, தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் என்பதும், அவரது பெற்றோர் ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. குல்பர்கா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.