சென்னை: முழுமையான விசாரணைக்கு பிறகே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போலி சாதி சான்றிதழ் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளன சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த விசாரணையை, குறித்த காலகெடுவுக்குள் முடிக்க உத்தரவிட கோரி பாங்க் ஆஃப் பரோடா வங்கி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய போதுமான காலவரம்பு நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
அதுமட்டுமின்றி பட்டியலின மற்றும் பழங்குடியினர்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழு அமைக்க வேண்டும் என்றும், இந்த குழுக்கள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், முழுமையான விசாரணைக்கு பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது சம்பந்தமாக 6 வாரங்களில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.


