Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மரத்தில் கார் மோதி தாய், மகள் உள்பட 3 பேர் பலி: 3 பேர் படுகாயம்

போளூர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பெண்குறைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சசிதர்(49). இவரது மனைவி கல்யாணி(33), மகன் பின்கா ராமச்சந்திரன்(11), மகள் ஸ்ரீரிதிஷா(8). இவர்களது உறவினர் ரவி(24), ஈஸ்வரி(62). 5 பேரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு காரில் புறப்பட்டனர். காரை சசிதர் ஓட்டிச்சென்றார். இன்று காலை 6மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வசூர் கிராமம் அழகர்மலையான் ஓட்டல் அருகே சென்றபோது கார் நிலைதடுமாறி தாறுமாறாக சென்று சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த கல்யாணி, ஸ்ரீரிதிஷா, ரவி ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஈஸ்வரி, பின்கா ராமச்சந்திரன், சசிதர் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த 3பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கல்யாணி, ஸ்ரீரிதிஷா, ரவி ஆகியோரின் சடலங்களை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.