Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாணியம்பாடி அருகே வடகிழக்கு பருவமழையையொட்டி கால்வாய் தூர்வாரும் பணி

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க தனித்தனியே குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வாணியம்பாடி அடுத்த உதயந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர் கொள்ளும் வகையில் ‌ பேரூர் மன்ற தலைவர் ஆ.பூசாராணி மற்றும் பேரூர் செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் மேற்பார்வையில் பருவமழை எதிர் கொள்ள தேவையான மண் மூட்டைகள், கடப்பாறைகள், மண்வெட்டி, மரம் அறுக்கும் கருவி, பொக்லைன், தண்ணீர் இறைக்கும் பம்பு செட்டுகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நேற்று பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், 15 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகலமாகவும், ஆழப்படுத்தியும் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் வீடுகளில் அருகாமையில் உள்ள பழைய டயர்கள், பயன் பாட்டில் இல்லாத உரல்கள், உடைந்த பக்கெட், பானைகள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அப்புறப்படுத்தி கழிவுநீர் கால்வாய்களில் கொசு ஒழிப்பு தெளிப்பு மருந்து அடிக்கப்பட்டது. அதேபோல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரை குளோரினேஷன் பரிசோதனை செய்யப்பட்டது.