Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாக். பெண்ணான சீமா ஹைதரும், சச்சின் மீனாவும் ‘சூனியம்’ வைத்ததாக கூறி வீட்டிற்குள் புகுந்த குஜராத் வாலிபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

நொய்டா: பாகிஸ்தான் பெண்ணான சீமா ஹைதரும், சச்சின் மீனாவும் தனக்கு ‘சூனியம்’ வைத்ததாக கூறி வீட்டிற்குள் புகுந்த குஜராத் வாலிபரிடம் உத்தரபிரதேச போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனாவுக்கும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் காதல் ஏற்பட்டது. சீமா ஹைதருக்கு ஏற்கனவே திருமணமாக மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் முற்றிப் போனதால், கடந்த 2023ம் ஆண்டு நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் தனது குழந்தைகளுடன் சட்டவிரோதமாக சீமா ஹைதர் நுழைந்தவர். பின்னர் தனது கள்ளக்காதலனை தேடிப் பிடித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வருகின்றனர். தற்போது இந்த ஜோடிக்கு, புதியதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சீமா ஹைதருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து தீவிரவாத எதிர்ப்புப் படை விசாரணை நடந்தியது.

சமீபத்தில், பஹல்காம் தாக்குதல்களுக்குப் பிறகு, ஒன்றிய அரசு பாகிஸ்தான் நாட்டினருக்கான விசாவை ரத்து செய்து, அவர்களை இந்தியாவை விட்டு வெளியேறச் சொன்னது. ஆனால் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய சீமா ஹைதர், தான் இந்து சமயத்தை ஏற்றுக்கொண்டு கிரேட்டர் நொய்டாவில் தனது இந்திய கணவரான சச்சின் மீனாவுடன் வசித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்து கொண்டதால் தங்களுக்கு பெண் குழந்தை உள்ளதாகவும் கூறினார். மேலும் தனக்கு எவ்வித தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில்லை என்று தெரிவித்தார். இதுதொடர்பாக சீமா ஹைதர் வெளியிட்ட வீடியோவில், ‘தற்போது நான் இந்திய பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகியிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன். கடந்த காலங்களில் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன்; ஆனால் இப்போது இந்தியாவின் மருமகளாக இருக்கிறேன். என்னை இந்தியாவிலேயே இருக்க விடுங்கள்’ என்று கூறினார்.

இந்நிலையில் சீமா ஹைதர் - சச்சின் மீனாவின் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக நுழைந்தார். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபரின் பெயர் தேஜாஸ் என்றும், அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்றும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையின் போது, ​​சீமா ஹைதரும், சச்சின் மீனாவும் தனக்கு ‘சூனியம்’ வைத்து விட்டதாகவும், அதன் மூலம் என்னை கிரேட்டர் நொய்டாவுக்கு ஈர்த்ததாகவும் கூறினர். இதுகுறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.