Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாஜகவுக்கு பாதகமான சூழல்கள் இருப்பதால் இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்கும்!: பிரபல முதலீட்டாளர் பரபரப்பு பேட்டி

மும்பை: தேர்தலில் பாஜகவுக்கு பாதகமான சூழல்கள் இருப்பதால் இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்கும் என்று பிரபல முதலீட்டாளர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினமே வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. அதனால் அன்றிலிருந்தே தொழில் துறையினர், வர்த்தகர்கள், முதலீட்டாளர்களின் எதிர்ப்பார்ப்புகளும் அதிகரிக்க தொடங்கிவிடும். மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி ெவளியாக உள்ளதால், தேர்தல் முடிவுகள் இந்திய பங்குச் சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிரபல முதலீட்டாளரும், எழுத்தாளருமான ருசிர் சர்மா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 250க்கும் குறைவான இடங்கள் கிடைத்தால், இந்திய பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க பாதகமான சூழல்கள் ஏற்படும். கிட்டத்தட்ட 10 முதல் 20 சதவீதம் அளவிற்கு சரிவைச் சந்திக்கும்.

உலகின் மிக விலை உயர்ந்த பங்குச் சந்தையாக இந்தியா இருந்தாலும், தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளே வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். அன்னிய நேரடி முதலீட்டிற்கான சூழலை, இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பணவீக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தி இருந்தாலும், 8 முதல் 9 சதவீதமாக உயர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பீகார், கர்நாடகா, மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு சாதகமான சூழல்கள் இல்லை. அங்குள்ள கூட்டணி கட்சிகள் மோசமாக செயல்படுகின்றன. மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் சம பலத்துடன் உள்ளன. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமான சூழல்கள் உள்ளது. ஆனால் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு சாதகமான சூழல் இல்லை. கர்நாடகாவில் பாஜக 25 இடங்களிலும், ஜேடிஎஸ் 3 இடங்களிலும் போட்டியிடுகிறது. 2019ல் பாஜகவுக்கு 25 இடங்கள் கிடைத்தன. ஆனால் இம்முறை 15 முதல் 18 தொகுதி வரை கிடைக்கும்’ என்றார்.