Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பா.ஜ 2வது தேர்தல் அறிக்கை: கே.ஜி முதல் பி.ஜி வரை டெல்லியில் இலவச கல்வி

புதுடெல்லி,ஜன.22: டெல்லியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு கே.ஜி முதல் பி.ஜி வரை இலவசக் கல்வி வழங்குவோம் என்று பாஜ புதிய வாக்குறுதி வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ தனது முதல் தேர்தல் அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம், பெண்கள், முதியவர்களுக்கு மாதம் ரூ.2500, கியாஸ் சிலிண்டர் ரூ.500, ஹோலி, தீபாவளிக்கு தலா ஒரு கியாஸ் சிலிண்டர் இலவசம் என்று பெண்களை குறிவைத்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது. நேற்று 2வது தேர்தல் அறிக்கையை பா.ஜ எம்பி அனுராக் தாக்கூர் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது;

* ஏழை மாணவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் கே.ஜி(கிண்டர் கார்டன்) முதல் பி.ஜி(முதுகலை பட்டப்படிப்பு) வரை இலவசக் கல்வி வழங்கப்படும்.

** டெல்லி இளைஞர்கள் யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு ரூ.15,000 நிதி உதவி வழங்கப்படும். இரண்டு முறை பயணக் கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் வழங்கப்படும்.

* டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து ‘‘முறைகேடுகள் மற்றும் ஊழல்கள்” குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்படும் .

* பாலிடெக்னிக் மற்றும் திறன் மையங்களில் உள்ள எஸ்சி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவி வழங்க டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உதவித்தொகை யோஜனா தொடங்கப்படும்.

* வீட்டுப் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்களுக்கான நல வாரியங்கள் அமைக்கப்படும். அவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை வாரியங்கள் வழங்கும்.

* வீட்டுப் பணிப்பெண்களுக்கு ஆறு மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள்

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5ம் தேதி நடைபெறும் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிகபட்சமாக புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், பா.ஜ வேட்பாளர் பர்வேஷ்வர்மா, காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித் உள்பட 23 பேர் போட்டியிடுகிறார்கள். ஜனக்புரி தொகுதியில் 16 வேட்பாளர்களும், ரோஹ்தாஸ் நகர், காரவால் நகர், லட்சுமி நகர் ஆகியவற்றில் தலா 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். படேல் நகர் மற்றும் கஸ்தூரிபா நகர் ஆகிய இடங்களில் தலா 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பா.ஜவால் அரசுப் பள்ளிகளில் இலவச கல்வி நிறுத்தப்படும்: கெஜ்ரிவால்

பாஜவின் தேர்தல் அறிக்கைகள் நாட்டிற்கு ஆபத்தானவை. இதன் மூலம் அரசு பள்ளிகளில் இலவச கல்வி நிறுத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில்,’ டெல்லியில் பாஜ ஆட்சிக்கு வந்தால், இலவசக் கல்வியை நிறுத்துவார்கள். இலவச சுகாதார வசதிகளை நிறுத்துவார்கள். டெல்லியில் ஏழைகள் வாழ்வதைக் கடினமாக்குவார்கள். இது சாமானியர்களின் நலன் மீதான நேரடித் தாக்குதல். பாஜவின் தேர்தல் அறிக்கையில் தேவையுள்ள மாணவர்களுக்கு மட்டுமே இலவசக் கல்வி வழங்கப்படும் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியைப் பெற பா.ஜ தலைவர்களின் பின்னால் ஓட வேண்டும். அவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்றால் அனைவருக்கும் வழங்கப்படும் இலவசக் கல்வியை நிறுத்த விரும்புகிறார்கள்’ என்று குற்றம் சாட்டினார்.