Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்துவது வாக்காளர்கள் பெயரை நீக்கும் சதித்திட்டமா?: தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கண்டனம்

பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களை நீக்கும் சதித்திட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியலை ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ செய்ய இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, நாட்டின் வாக்காளர் பட்டியல்களில் குறைபாடுகள் உள்ளன என்பதை தேர்தல் ஆணையமே வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு சமம் என அக்கட்சி கூறியுள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்து ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்பது, நாங்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான தீர்வு என்ற பெயரில் மறைக்கப்பட்ட வஞ்சகமான மற்றும் சந்தேகத்திற்குரிய திட்டமாகும். அரசு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று அடையாள மற்றும் குடியிருப்பு ஆவணங்களைச் சரிபார்ப்பதால், அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கும் பெரும் அபாயம் உள்ளது.

மேலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற சிக்கலான ஆவணங்களைக் கேட்பது, பீகாரில் உள்ள சுமார் 8.1 கோடி வாக்காளர்களுக்கு தேவையற்ற மற்றும் கடினமான சுமையாகும். கடந்த மார்ச் மாதம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் திட்டத்தை முன்மொழிந்த தேர்தல் ஆணையம், வெறும் மூன்று மாதங்களில் அதை திடீரெனக் கைவிட்டு பீகாரில் இந்த புதிய திட்டத்தை அறிவித்தது ஏன்? தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்வதன் உள்நோக்கம் சந்தேகத்திற்குரியது. மேலும் தேர்தலுக்குச் சற்று முன்பு தற்போதைய வாக்காளர் பட்டியலை நிராகரித்து, முற்றிலும் புதிய பட்டியலை உருவாக்கும் தந்திரமாக இருக்கிறது’ என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.