Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பீகாரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி செல்லப்பட்ட 16 வயது சிறுமியை கொன்று ட்ராலி பேக்கில் அடைத்து வீசி எறிந்த ‘பாய் பிரண்ட்’: 7 பேர் கைது; இரு மாநில காவல் துறையும் தீவிர விசாரணை

பெங்களூரு: பீகாரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி செல்லப்பட்ட 16 வயது சிறுமியின் சடலம் ட்ராலி பேக்கில் வீசி எறியப்பட்ட நிலையில், இவ்வழக்கில் பாய் பிரண்ட் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இரு மாநில காவல் துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சந்தாபுரா ரயில்வே பாலத்தின் கீழே கடந்த மே 21 அன்று காலை ஒரு நீல நிற ட்ராலி பேக் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது.

இந்தப் பையை அவ்வழியாக சென்ற குப்பை சேகரிக்கும் நபர் கண்டார். அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கலாம் என நினைத்து ட்ராலி பேக்கை திறக்க முயன்றார். ஆனால், அவரால் அந்த பேக்கை திறக்க முடியவில்லை. அதனால் அவர் அதன் மேல் பகுதியை கூர்மையான ஆயுதத்தால் வெட்டினார். அப்போது பேக்கின் உள்ளே 16 வயதுடைய சிறுமியின் உடல் திணிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறியபடி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில், சூர்யநகர் காவல் நிலையத்திற்கு இந்தப் பை மற்றும் அதில் உள்ள பெண்ணின் உடல் குறித்து தகவல் கிடைத்தது. காவல்துறையினர் உடனடியாக பையையும் உடலையும் ஆய்வு செய்தனர். ஆனால் பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிய உதவும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இருப்பினும், உடலின் முகம் தெளிவாக இருந்ததால், காவல்துறை அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. முதற்கட்டமாக, இந்தப் பை ஓடும் ரயிலில் இருந்து எறியப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை கருதியது. ஆனால் எந்த ரயில், எப்போது இந்தப் பாலத்தைக் கடந்தது என்பது குறித்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையில், இந்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது, பையில் இருந்து தெரிந்த பெண்ணின் முகம் பலரால் பகிரப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், ‘பீகாரின் நவாதா மாவட்டத்தில் உள்ள ஹிசுவா கிராமத்தில், கடந்த மே 15 அன்று 16 வயது சிறுமி ஒருவர் திடீரென தனது வீட்டில் இருந்து மாயமானார். அவரது பெற்றோர் அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக, அவரது தந்தை நிர்மல் தாஸ், ஹிசுவா காவல் நிலையத்தில் தனது மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார். ஆனால், காவல்துறையின் விசாரணையில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. மே 23 அன்று, பெங்களூருவில் கண்டெடுக்கப்பட்ட பையில் உள்ள சிறுமியின் உடல் குறித்த செய்தி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வழியாக தெரிந்தது.

பையில் இருந்து தெரிந்த பெண்ணின் முகத்தைப் பார்த்த போது, அது மே 15 அன்று மாயமான சிறுமியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. பெங்களூரு சூர்யநகர் காவல்நிலையம் மூலம் இது நிர்மல் தாஸின் மகளின் உடல் என உறுதியானதும், ஹிசுவா காவல்துறையினர் பெங்களூருக்கு சென்றனர். அங்கு, நிர்மல் தாஸ் தனது மகளின் உடலை உறுதி செய்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, சிறுமியின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது. மேலும் அவரது கழுத்து எலும்பு உடைந்திருந்தது. கொலையாளி அவரது மார்பில் அமர்ந்து கழுத்தை இறுக்கியதாக தெரிகிறது. இந்த வழக்கு பெங்களூரு சூர்யநகர் காவல் நிலையத்தில் பதிவாகி இருந்தாலும், சிறுமியின் கடத்தல் புகார் நவாதாவில் பதிவாகியிருந்ததால், இரு மாநில காவல்துறைகளும் ஒருங்கிணைந்து விசாரணையை மேற்கொண்டனர்.

நிர்மல் தாஸ் தனது புகாரில், ஆஷிக் குமார் என்பவர் தனது மகளைக் கடத்தியதாக சந்தேகம் தெரிவித்திருந்தார். ஆஷிக் குமார் என்பவர் ஹிசுவாவுக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்; அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், மனைவி மற்றும் குழந்தைகளுடன் நவாதாவில் வசித்து வந்தாலும், தற்போது பெங்களூரில் வேலை செய்து வந்தார்.  இதையடுத்து, ஆஷிக் குமாரை கைது செய்ய அவரது கிராமத்திற்குச் சென்று, அவருடன் அவரது நண்பர்கள் மற்றும் பெங்களூருவில் வசிக்கும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்துள்ளோம்.

பெங்களூரு காவல்துறையும் நவாதாவுக்கு சென்று விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், ஆஷிக் குமார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு வேலைக்காகச் சென்றவர் என்பதும், அவரது மாமாவின் உதவியுடன் தனியார் நிறுவனத்தில் வேலை பெற்று, அவர்களுடன் வசித்து வந்தது தெரியவந்தது. கடந்த மே மாதம் விடுமுறையில் ஹிசுவாவுக்கு வந்த ஆஷிக் குமார், கொலையான ரியா என்ற சிறுமியை ஏமாற்றி பெங்களூருக்கு அழைத்துச் சென்றார்.

கடந்த மே 15ல், அவர் அந்த சிறுமியுடன் ஹிசுவாவில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கயா ரயில் நிலையத்திற்கு பயணித்து, அங்கிருந்து கொல்கத்தாவிற்கு சென்று, பின்னர் பெங்களூருக்கு 2,400 கிலோமீட்டர் பயணம் செய்து வந்தார். மே 20ல், ஆஷிக் குமாரும் அந்த சிறுமியும் ஒரு வீட்டில் இருந்தபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரியாவின் கழுத்தை நெறித்து ஆஷிக் குமார் கொலை செய்தார்.

பின்னர், தனது நண்பர்களை அழைத்து, இது தற்கொலை என்று கூறி, வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து, கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்ததாக காட்ட முயன்றார். ஆனால், கண்ணாடி உள்ளிருந்து உடைக்கப்பட்டதால், உடைந்த கண்ணாடிகள் வெளியே விழுந்தன, இது முக்கிய ஆதாரமாக அமைந்தது. இறுதியில், ஆஷிக் குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியின் உடலை ட்ராலி பையில் அடைத்து வைத்து, இரவு நேரத்தில் ஒரு கேப் மூலம் சந்தாபுரா ரயில்வே பாலத்திற்கு சென்று, அங்கு பையை வீசிவிட்டு தப்பினர்.

பீகாரில் இருந்து பெங்களூருவிற்கு கிட்டத்திட்ட 2,400 கிலோமீட்டர் தூரம் ரியாவை கடத்தி வந்ததற்கான காரணம் என்ன? ரியாவுக்கும் ஆஷிக் குமாருக்கும் ஏற்கனவே ஏதேனும் கள்ளத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். இருந்தும் முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுமியின் பாய் பிரண்டாக ஆஷிக் குமார் இருந்துள்ளார். அதனால் அவரது பேச்சைக் கேட்டு பீகாரில் இருந்து பெங்களூரு அழைத்து வந்துள்ளார். எதற்காக சிறுமியை கொன்றார்? என்பது குறித்து தனியாக விசாரித்து வருகிறோம்’ என்றனர்.