Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

40 ஆண்டுகால சோகத்திற்கு முற்றுப்புள்ளி; போபால் விஷவாயு கழிவுகள் முற்றிலும் எரிப்பு: 800 டன் சாம்பலை புதைக்க முடிவு

போபால்: சுமார் 40 ஆண்டுகால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போபால் விஷவாயு கழிவுகள் முற்றிலும் எரிக்கப்பட்டதில் 800 டன் சாம்பல் கிடைத்ததால், அவற்றை புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தொழில்துறைப் பேரழிவாகக் கருதப்படும் மத்திய பிரதேச மாநிலம் போபால் விஷவாயு விபத்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்து, லட்சக்கணக்கானோரை பாதித்தது. இந்த விபத்து நடந்த போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலை வளாகத்தில், சுமார் 337 மெட்ரிக் டன் அளவிலான கொடிய நச்சுக் கழிவுகள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மூட்டைகளில் பாதுகாக்கப்பட்டு வந்தன.

இந்த நச்சுக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது பெரும் சவாலாக இருந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம், அந்த கழிவுகள் அனைத்தும் விஞ்ஞானப்பூர்வமாக போபாலில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில், 40 ஆண்டு கால சோக அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அந்த 337 மெட்ரிக் டன் நச்சுக்கழிவுகளையும் எரிக்கும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் முழுமையாக நிறைவடைந்தது.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அதிகாரி எஸ்.என். திவேதி கூறுகையில், ‘கழிவுகளை எரிக்கும்போது வெளியேறும் துகள்கள், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கன உலோகங்கள் போன்ற உமிழ்வுகள் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்தன. பாதரசத்தின் அளவைக் கண்காணிக்க சிறப்பு கருவியும், கிராமங்களில் காற்றின் தரத்தைக் கண்காணிக்க இரண்டு நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கழிவுகள் எரிப்பு செயல்முறையின் மூலம் சுமார் 800 டன் சாம்பல் உருவாகியுள்ளன. அவை விரைவில் நிலத்தில் பாதுகாப்பாக புதைக்கப்படும். மேலும், கழிவுகளைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட 21 டன் எடை கொண்ட பைகள் மற்றும் மண் ஆகியவை நாளைக்குள் எரிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.