Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

69 வயதில் 2ம் திருமணத்திற்கு முயற்சி; மாஜி வனத்துறை அதிகாரி கழுத்தறுத்து கொலை: மகன் கைது

சேலம்: சேலத்தில் 2வது திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து மகனால் கழுத்தறுக்கப்பட்ட மாஜி வனத்துறை அதிகாரி நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (69). வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி சண்முகவள்ளி, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இவர்களுக்கு தமிழழகர் (23), கிரி வெங்கடேஷ் என இரு மகன்கள் உள்ளனர். இதில், தமிழழகர் கொண்டலாம்பட்டி பகுதியில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இதனிடையே செல்வகுமார், தனக்கு 2வது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தார். ஆனால் அவரது மகன்களுக்கு இதில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகன்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேசமயம், தனது ஆட்டோ மொபைல்ஸ் கடையை விரிவாக்கம் செய்வதற்காக, தமிழழகர் அடிக்கடி செல்வகுமாரிடம் பணம் கேட்டு வந்துள்ளார். இதுதொடர்பாகவும் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தந்தை-மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த செல்வகுமார், வீட்டிலிருந்த இரும்பை எடுத்து தமிழழகரை தாக்கினார். இதனால் காயமடைந்த தமிழழகர் ஸ்பேனரை எடுத்து செல்வகுமாரை சரமாரியாக தாக்கினார். அப்போதும் ஆத்திரமடங்காத அவர், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து செல்வகுமாரின் கழுத்தை அறுத்தார். சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த செல்வகுமாரை மீட்டு சேலம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார்.

இதனிடையே தகவலறிந்து வந்த சூரமங்கலம் போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரித்தனர். இதில், தொழில் விரிவாக்கத்திற்கு பணம் தராத நிலையில், செல்வகுமார் 2வது திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்து வந்ததால், தமிழழகர் ஆத்திரத்தில் தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து தமிழழகரை போலீசார் கைது செய்தனர்.