Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அங்கன்வாடி மையங்களுக்கு மே 11 முதல் 25ம் தேதி வரை 15 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை: அங்கன்வாடி மையங்களுக்கு மே 11 முதல் 25ம் தேதி வரை 15 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக மே 2’ 2025 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து வழங்காமல் வேலையை புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக்கூடியதாக உள்ளதென்பது மிகவும் வருந்தத்தக்கது. மே 2 ம்தேதி எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளது, மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு முன்னறி விப்புமின்றி போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது. அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மைய பயணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசாணை எண்.117, சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை நாள்: 30.04.2025-ன்படி குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி மையங்கள்) மே மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் முதல் 25-ம் நாள் முடிய 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும். உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி 300 நாட்களுக்கு குறையாமல் குழந்தைகள் மையப் பயனாளிகளுக்கு உணவு வழங்கப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

தேசிய விடுமுறை, பண்டிகை நாட்களுக்கான விடுமுறை , உள்ளுர் விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகளையும் கணக்கிட்டு, 300 நாட்கள் கண்டிப்பாக மைய செயல்பாடுகளும் அதன் மூலம் முன் பருவ பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதும் உறுதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கையினை ஏற்ற இவ்வரசு 2022ஆம் ஆண்டு முதல் மே மாதம் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை அறிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் சரத்துகளை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கண்ட விடுமுறை நாட்களுக்கான சத்து மாவினை முன்கூட்டியே முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மே மாதத்தின் ஆரம்பத்திலேயே வழங்கவும் ஆணை வழங்கியுள்ளது.

குழந்தைகள் மைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு வீட்டுக்கு எடுத்து சென்று உண்ணும் வகையில் THR - (TAKE HOME RATION) - ஆக வழங்கப்பட்டு வருகிறது. பதவி உயர்வு, பணி மாறுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக பணியாளர் சங்கங்களால் அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.