Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அன்புமணியுடன் ராமதாஸ் சமரசமா? எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு

திண்டிவனம்: ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவால் அன்புமணியுடன் சமரசமாகி விட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கை : மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு நாள் மாநாட்டை, இதுவரை நடந்தவற்றை விட 100 மடங்கு சிறப்பாக நடத்த வேண்டும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் நடைபெறும் சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணியை நியமித்திருக்கிறேன். இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணமும், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் பயணமும், இறை நம்பிக்கைக் கொண்ட இந்துக்களுக்கு காசி யாத்திரையும் புனிதமானவை.

பாட்டாளிகளைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருநாள் சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரம் கடற்கரை மணற்பரப்பில் கூடுவது தான் புனித யாத்திரை. இந்த ஒரு பயணம் கொடுக்கும் உற்சாகம் பாட்டாளிகளுக்கு அடுத்த ஓராண்டுக்கு சுறுசுறுப்பாக பணியாற்ற வகை செய்யும். இதுவரை நடத்தப்பட்ட 20 மாநாடுகள் எவ்வாறு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் நடத்தப்பட்டனவோ, அதை விட 100 மடங்கு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் இந்த ஆண்டு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது தான் எனது கனவு ஆகும்.

அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்து கிராமங்களில் இருந்தும் அணி அணியாய் வாகனங்கள் புறப்பட வேண்டும். அனைத்தையும் விட மிகவும் முக்கியம் மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும். பயணப் பாதையில் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்து விடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மாமல்லபுரம் மாநாட்டுத் திடலில் பாட்டாளிகளின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் யார் என்று ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது. தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அதற்கு பதிலடியாக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நானே தலைவராக தொடர்வேன் என்று அன்புமணி தெரிவித்தார். தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதலால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தைலாபுரம், பனையூர் என இரண்டு பேரின் வீட்டிற்கும் சென்று சமரசம் செய்து வந்தனர். இதுகுறித்து பேட்டியளித்த பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பாமகவில் சலசலப்பு சரியாகிவிட்டது. விரைவில் ராமதாஸ், அன்புமணி ஒன்றாக பேசுவார்கள்’ என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சித்திரை முழுநிலவு நாள் மாநாடு ஏற்பாடுகளை அன்புமணி பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தார். இந்நிலையில், மாநாட்டு குழுத்தலைவராக அன்புமணியை நியமித்து இருக்கிறேன். பாட்டாளிகள் ஆவலுடன் வர வேண்டும் என்று ராமதாஸ் அழைப்பு விடுத்து உள்ளார். இதனால் அன்புமணியுடன் ராமதாஸ் சமரசமாகி விட்டாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதலால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தைலாபுரம், பனையூர் என இரண்டு பேரின் வீட்டிற்கும் சென்று சமரசம் செய்து வந்தனர்.