Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையன்று கொடியேற்றத்துடன் துவங்கும். அதன்படி, இந்த ஆண்டில் கடந்த 29ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா துவங்கியது.

இதில் முக்கிய நிகழ்வான கடந்த 11ம் தேதி நள்ளிரவு மயான பூஜை நடைபெற்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலையில் சக்தி கும்பஸ்தாபனம் நடந்தது. பின், குண்டம் இறங்கும் பக்தர்கள் கோயிலில் காப்புக்கட்டி கொண்டனர். நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், சேத்துமடை ரோட்டில் உள்ள, மாசாணியம்மன் திருமண மண்டப வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட 40அடி நீளம், 12அடி அகலமுடைய குண்டத்தில் சுமார் 35டன் விறகால் பூ(அக்னி) வளர்க்கப்பட்டது.

அந்நேரத்தில், கண்கவர் வாணவேடிக்கை நடந்தது. தொடர்ந்து இன்று காலையில், காப்புக்கட்டிய பக்தர்கள் உப்பாற்றில் நீராடினர். பின் 6.30 மணியளவில் மாசாணியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. அங்கிருந்து தலைமை முறைதாரர் மனோகரன் பேழைப்பெட்டியை தலையில் சுமந்து கொண்டுவர, அருளாளி உள்ளிட்டோர் மாலை அணிந்த பக்தர்கள் உடன் நடைபயணமாக குண்டம் நோக்கி வந்தனர். சுமார் 7.30 மணியளவில் குண்டத்தில், அருளாளி அருண்குப்புசாமி பேழைப்பெட்டியில் இருந்த பூப்பந்தை உருட்டி விட்டு முதலில் குண்டம் இறங்கினார்.

பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பய பக்தியுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்ததும், பெண்கள் குண்டத்தில் மலர்தூவியும், வணங்கி சென்றனர். குண்டம் திருவிழாவையொட்டி கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். மாசாணியம்மன்கோயிலில், நாளை(15ம் தேதி) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும், 16ம் தேதி பகல் 12 மணியளவில் மாசாணியம்மனுக்கு மகா அபிஷேக அலங்கார பூஜை பூஜையுடன் விழா நிறைவடைகிறது.