Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமித்ஷா அறிவிப்பை மீண்டும் நிராகரித்த அதிமுக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே கிடையாது: தம்பித்துரை திட்டவட்டமாக அறிவிப்பு; நயினார் முதல்வர் வேட்பாளர் போஸ்டரால் பரபரப்பு

சென்னை: கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே கிடையாது என்று அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர் தம்பித்துரை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதேநேரத்தில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனை, வருங்கால முதல்வரே என்று அவரது ஆதரவாளர்கள் நெல்லையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு வரவழைத்த அமித்ஷா, கூட்டணிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று கட்டளையிட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் ஆகியோர் மீது வருமான வரித்துறை, அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதால், வேறு வழி இல்லாமல் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக்கு சம்மதித்தார்.

அதைத் தொடர்ந்து சென்னையில் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, 2026ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணியை அறிவித்தார். அப்போது, அமித்ஷா பேட்டி அளிக்கும்போது, தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது. பாஜவுடன் கூட்டணி மட்டும்தான் என்றார். அமித்ஷாவும் அப்படித்தான் சொன்னார். அவர் சொன்னதை நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள்” என்று விளக்கம் அளித்தார். ஆனால் அதற்கு பதில் அளித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, கூட்டணி ஆட்சி என்பது குறித்து அமித்ஷா முடிவு செய்வார் என்றார். இந்த கூட்டணி விவகாரம் பெரிதாகிக் கொண்டே சென்றது.

இந்தநிலையில், நேற்று சென்னையில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பித்துரை நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியான முறையில் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் இதற்கு முன்னர் எதாவது கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறதா? சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் மெட்ராஸ் என்ற அழைக்கப்பட்ட இந்த பகுதியில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. திமுகவை எதிர்க்க வேண்டுமென்றால் பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா சொன்னது காரணமாக கூட்டணி கட்சி தொடர்பாக அத்வானி மற்றும் வாஜ்பாய் இடம் நான்தான் சென்று கூட்டணி குறித்து பேசினேன். அப்போதே அவர்கள் திராவிட கட்சி எங்களுடன் கூட்டணி வைக்கிறீர்களா என கேட்டனர். அதன் அடிப்படையில் தான் அப்போது கூட்டணி அமைக்கப்பட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தவுடன் திமுக கூட்டணி அமைத்தார்கள். மக்கள் நலனுக்காக எப்படி பாஜவுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தாரோ, அதேபோன்று தற்போது எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்திருக்கிறார். நல்ல முடிவு கிடைக்கும்.

இஸ்லாமிய மக்களுக்கு நன்றாக தெரியும், அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நிச்சயமாக நாங்கள் குரல் கொடுப்போம். கூட்டணி என்ற நிலைமை வந்தபோது கூட வக்பு சட்டத்தை நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம். தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி என யாரும் கூட்டணி ஆட்சி அமைத்தது இல்லை. இதுவரை எந்தெந்த தேர்தலிலாவது கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நடந்திருக்கிறதா? திடீரென இந்த கூட்டணி அமையவில்லை. கடந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திலேயே கூட்டணி குறித்து கூறிய முடிவு எடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி கிடையாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இதுவரை கிடையாது. இனியும் கிடையாது.

கூட்டணி தான், கூட்டணி ஆட்சி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியது சரிதான். 2006 போல யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை என்றார். இந்தநிலையில் நேற்று மீண்டும் பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘‘இந்த பிரச்னை குறித்து அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முடிவு எடுப்பார்கள்’’ என்றார். அப்போதும் கூட்டணி ஆட்சி இல்லை என்று மறுக்கவில்லை. இந்தநிலையில், நயினார் நாகேந்திரன்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கும்விதமாக நெல்லையில் அவரது ஆதரவாளர்கள் ‘வருங்கால முதல்வரே’ என்று போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளனர். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அதிமுக-பாஜ கூட்டணி குறித்து கேள்வியே கேட்க வேண்டாம்:- நயினார் நாகேந்திரன் அட்வைஸ்

அதிமுக-பாஜ கூட்டணி குறித்து கேள்வியே கேட்க வேண்டாம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவப் படத்திற்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக-பாஜ கூட்டணி குறித்து கேள்வியே கேட்க வேண்டாம். அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி என்ன பேசிக் கொள்கிறார்களோ, என்ன முடிவு எடுக்கிறார்களோ அது நடக்கும். தேவையில்லாமல் உங்கள் சந்தேகங்களை கிளப்பி பிளவுபடுத்தும் முயற்சியை கை விட்டுவிடுங்கள். தமிழக மக்கள் நலன் கருதி மது, போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கவும், சொத்துவரி, மின்சார கட்டணம் உயர்வை கட்டுப்படுத்தவும் மக்கள் நலன்சார்ந்த பிரச்னைக்காக எல்லோரும் முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.