Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கூட்டணியில் இருந்து போகமாட்டேன்... என்னை முதல்வராக்கியது வாஜ்பாய்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திடீர் கருத்து

பாட்னா: பாஜக கூட்டணியில் இருந்து போகமாட்டேன் என்றும், என்னை முதல்வராக்கியது வாஜ்பாய் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திடீர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் பலமுறை கூட்டணி மாறிய பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் அளித்த பேட்டியில், ‘இனிமேல் கூட்டணி மாற்றங்கள் இருக்காது. எப்போதும் இனிமேல் இங்கேயே (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) இருப்பேன். கடந்த காலங்களில் எங்களது கட்சி சில முறை இங்கும், சில முறை அங்கும் கூட்டணி வைத்தது.

ஆனால், இனிமேல் அவ்வாறு நடக்காது. என்னை முதல்வராக்கியது வாஜ்பாய்’ என்று கூறினார். இந்தாண்டு கடைசியில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தனது தந்தை நிதிஷ் குமார் தொடர்ந்து இருப்பார் என்று அவரது மகன் நிஷாந்த் குமார் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் பாஜக தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. கடந்த 2024 மக்களவைத் தேர்தல்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பிய நிதிஷ் குமார், ஏற்கனவே கூட்டணியில் இருந்த மகாகத்பந்தன் கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறினார்.

கடந்த 2013ல் மோடியின் பாஜக தேசிய தலைமை அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், அப்போது பாஜகவில் இருந்து பிரிந்தவர். கடந்த 2017 மற்றும் 2024ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு நிதிஷின் தலைமை முக்கியமானது என்று பாஜக மூத்த தலைவர்கள் அமித் ஷா, சம்ராட் சவுத்ரி ஏற்கனவே கூறியிருந்தனர். எனவே இந்த பார்முலா வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பீகாரை சேர்ந்த பாஜக தலைவர்கள், நிதிஷ் குமாரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக ஏற்க தயக்கம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.