லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் தேர்தலில் போட்டியிடாத போது தான் முதலமைச்சராகிறேன். இந்த முறையும் மக்களவை உறுப்பினராக இருந்தபடியே நேரடியாக முதலமைச்சராகப் பதவியேற்பேன்'' என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடாமலேயே, மக்களவை உறுப்பினராக (MP) இருந்துகொண்டே நேரடியாக மாநில முதலமைச்சராகப் பதவியேற்றதை அவர் சுட்டிக்காட்டி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தல் போட்டியில் நேரடியாகக் களம் இறங்காத போது தான் முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைப்பதால், தனக்கு இந்த யுத்தி ராசியாக இருப்பதாகவும், அதையே இந்த முறையும் பின்பற்றப் போவதாகவும் கூறியுள்ளார். இந்த ராசிப்படி 2027 தேர்தலிலும் தற்போதைய மக்களவை உறுப்பினராக நீடித்தபடியே தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாமல் வென்று, 'நேரடியாக மாநில முதலமைச்சராகப் பதவியேற்பேன்' என்று அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்


