அதிமுக மாஜி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வங்கி லாக்கர்களில் தங்கம் பதுக்கல் பினாமி பெயர்களில் சொத்துகள்?: 52 பத்திரப்பதிவு ஆபீசில் சோதனை நடத்த திட்டம்
ஆரணி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன்களின் வங்கி கணக்கு லாக்கர்களை விஜிலென்ஸ் போலீசார் சேதனை நடத்தியதில் கணக்கில் வராத தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் ேசவூர் ராமச்சந்திரன் உறவினர் மற்றும் பினாமி பெயர்களில் எவ்வளவு சொத்து வாங்கப்பட்டுள்ளது என கண்டறிய 52 பத்திரப்பதிவு அலுவலகங்களில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 முதல் 2021 வரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார். இதில், அதிமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமானத்திற்கு அதிகமாக பல கோடிகளில் சொத்துகள் வாங்கி குவித்ததாக, சென்னையில் உள்ள விஜிலென்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதேபோல், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேவூர் ராமச்சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அளித்த சொத்து மதிப்பு பட்டியலை விட, 2021ஆம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட சொத்து பட்டியலின் மதிப்பை விட பல மடங்கு உயர்ந்திருந்தது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.12.43 கோடி மதிப்பில் சொத்துக்கள் வாங்கி குவித்திருந்ததாகவும். அதில், முறைப்படி கணக்கில் வரவைக் கப்பட்டு ரூ.4.40 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அவரது வருமானம் மூலம் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக. திருவண்ணாமலை விஜிலென்ஸ் போலீசார் விசாரித்து வந்தனர். வருமானத்துக்கு அதிகமாக 125.39 சதவீதத்திற்கு அதிகமாக ரூ.8.35 கோடி மதிப்பில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவரது மனைவி மணிமேகலை, மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகிய 4 பேர் மீது கடந்த 16ஆம் தேதி விஜிலென்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து, கடந்த 17ம் தேதி சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அவரது மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சேவூர் ராமச்சந்திரன் மகன் சந்தோஷ்குமார் வீட்டில் ரூ.1.75 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கரில் வைத்திருந்த வெள்ளி மற்றும் தங்க நகைகள் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் சேவூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மணிமேகலை பெயரில் உள்ள ரூ.6.28 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், சேவூர் ராமச்சந்திரனின் மனைவி மணிமேகலை, மகன் சந்தோஷ்குமார், மருமகள் சொர்ணாம்பிகா ஆகிய 3 பேரின் வங்கி கணக்கு விவரங்கள், லாக்கரில் வைத்திருந்த நகைகளின் ஆவணங்கள் குறித்து நேற்று ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள வங்கியில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 6 மணிநேரம் நடந்த விசாரணையில் 90 சவரன் நகை, கிலோ கணக்கில் வெள்ளி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் எப்போது, எவ்வாறு வாங்கப்பட்டது, அதற்குண்டான ஆவணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்ததில், கணக்கில் வராத நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று மாலை 6மணியளவில் சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் சென்றனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு ேபாலீசார் இன்று கூறுகையில், ‘முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த 17ம் தேதி அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது 2 மகன்கள், ராமச்சந்திரனின் மனைவி ஆகியோரின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயரில் சொத்து வாங்கப்பட்டுள்ளதா என கண்டறிய திருவண்ணாமலை, சேலம், ஊட்டி, ெசன்னை, காஞ்சிபுரம் உள்பட 52 இடங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
முதற்கட்டமாக சந்தோஷ்குமார், அவரது மனைவி சொர்ணாம்பிகாவின் வங்கி கணக்கு மற்றும் லாக்கரில் ஆய்வு செய்ததில் கணக்கில் வராத நகை, வெள்ளி பொருட்கள் வாங்கப்பட்டதும், பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. அடுத்த கட்டமாக சேவூர் ராமச்சந்திரன், அவரது மற்றொரு மகன் விஜயகுமார், அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களின் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். இந்த ஆய்வுக்கு பின்னரே எவ்வளவு சொத்துகள் வருமானத்திற்கு அதிகமாக வாங்கி குவிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிய வரும்’ என்றனர்.
