Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்புமிக்க வெற்றி கூட்டணி அமையும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்புமிக்க வெற்றி கூட்டணி அமையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், 'அம்மா அவர்களின் புகழ் ஓங்குக' என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது. பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம்போல் உயர்ந்து விளங்கிய ஜெயலலிதாவை, ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழ் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கின்றார்கள்.

எப்போது தேர்தல் வரும், ஜெயலலிதாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மிகச் சிறந்த நிர்வாகியாகவும், ஒன்றிய-மாநில உறவுகளை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையும், செயல் திட்டமும் கொண்டவராகவும், தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட அதிமுக அரசும் அந்த முயற்சியில் தொய்வின்றி செயலாற்றியது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெள்ளம்போல் திரண்டு வரும் அதிமுக உடன்பிறப்புகளையும், தமிழ் நாட்டு நலன் நாடும் மக்களையும் பார்க்கையில், அதிமுக ஆட்சியே அடுத்து மலரப்போகும் நல்லாட்சி என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.

இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் அதிமுகவை காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.

அதிமுக தான் உண்மையான மக்கள் இயக்கம்; மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம்; இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்று ஜெயலலிதா சூளுரைத்தார். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அதிமுக தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.