Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்: மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: நாடு முழுவதும் கொந்தளித்துள்ள உழவர்களின் கவலையைப் போக்க, வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமையகத்தில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அவை பின்வருமாறு : ஈரோட்டில் ஜூன் 22ம் தேதி நடைபெற்ற 31வது பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தின்படி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், கழகம் எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருக்கும் மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்டிராவை உருவாக்க முனைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் செயல் திட்டங்களை ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும். இந்தியா முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசின் நீர்வளத் துறை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நாடு முழுதும் கொந்தளித்துள்ள உழவர்களின் கவலையைப் போக்க , வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் சமய நம்பிக்கையை அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்த நினைக்கும் பாஜகவின் முயற்சிகள் தகர்ந்து தவிடு பொடியாகும். பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு மாவட்டக் கழகங்கள் முனைந்து செயலாற்ற வேண்டும். தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது. அந்த பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது. அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் செந்திலதிபன், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், ராசேந்திரன், ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.