Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

படிப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: பழநியில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

பழநி: பழநி படிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயில் அடிவார பகுதிகளில் கடந்த ஜூலை 31ம் தேதிக்குள் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள வாடகை கடைகளை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இதன்படி கிரிவீதியில் உள்ள கடைகள் நேற்று அகற்றப்பட்டன. தொடர்ந்து படிப்பாதையில் உள்ள மண்டப இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, டிஎஸ்பி தனஞ்செயன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது படிப்பாதையில் உள்ள மடம் ஒன்றில் அதன் உரிமையாளர் வசந்த் (27) என்பவர், தனது இடம் பட்டா இடம் எனக்கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரை மீட்டனர். பின்னர் தற்காலிகமாக கடைகளுக்கு சீல் வைப்பதாகவும், நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணலாமென முடிவு எடுக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.