Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நடிகர் விஜய் அரசியல் வருகை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்:ப.சிதம்பரம் பேட்டி

சென்னை: ‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து சவுந்திரா கைலாசம் இலக்கிய பரிசை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதன்படி எழுத்தாளர் ஆசு என்று அனைவராலும் அறியப்பட்ட ஆ. சுப்பிரமணி எழுதிய பஞ்சவர்ணம் நாவல் கடந்த 2023ம் ஆண்டுக்கான ரூ. 2 லட்சம் பரிசினை பெற்றது. இந்த நாவல் வெளியீட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று தி.நகரில் நடைபெற்றது.

விழாவுக்கு, முன்னாள் ஒன்றிய அமைச்சரும், எம்பியுமான ப.சிதம்பரம் தலைமை வகித்து, எழுத்தாளர் ஆசுக்கு ரூ. 2 லட்சம் காசோலையை வழங்கி கவுரவித்தார். கவிஞர் வைரமுத்து நாவலை வெளியிட்டு விழா பேருரையாற்றினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த இலக்கிய விழாவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அதை, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கவிஞர் இலக்கியா நடராஜன் படித்தார். கவிதா பதிப்பகத்தின் சேது சொக்கலிங்கம் வரவேற்று பேசினார்.

எழுத்தாளர் அகர முதலவன் இந்த நாவலை அறிமுகம் செய்தார்.மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், நூலினை மதிப்பீடு செய்து பேசினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, எம்பிக்கள் விஷ்ணு பிரசாத், வழக்கறிஞர் சுதா மற்றும் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தி.நகர் ராம், வணிகர் சங்க தலைவர் வி.பி.மணி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் செல்ல வேண்டிய, போக வேண்டிய தூரங்கள் எவ்வளவோ உள்ளன. அவர் இன்னும் கட்சியின் கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும். களத்திலே அதிகமாக செயல்பட வேண்டும். எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.