Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

நடிகர் ராஜேஷ் திரையுலகுடன் மட்டும் நின்று விடாமல், சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டியவர்: முத்தரசன் புகழஞ்சலி

சென்னை: நடிகர் ராஜேஷ் திரையுலகுடன் மட்டும் நின்று விடாமல், சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டி பல்வேறு தளங்களில் செயல்பட்டவர் என முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது; தமிழ் திரையுலகில் தனி முகமாக விளங்கிய நடிகர் ராஜேஷ் (75) இன்று காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் அணைக்காட்டை பூர்வீகமாக கொண்ட வில்லியம் - வில்லி கிரேஸ் தம்பதியர் மன்னார்குடியில் வாழ்ந்த போது 1949 டிசம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர் ராஜேஷ்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பள்ளிக் கல்வியை முடித்த ராஜேஷ், காரைக்குடியில் உயர் கல்வியை தொடங்கி, சென்னையில் நிறைவு செய்தார். ஆரம்ப காலத்தில் இருந்த நடிப்புக் கலையின் மீது ஆர்வம் கொண்ட ராஜேஷ் நாடகத்தில் நடிக்க தொடங்கி, அவள் ஒரு தொடர்கதை மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். தொடர்ந்து மலையாள திரையுலகிலும் தனிச் சிறப்பு பெற்று திகழ்ந்தார். திரையுலகுடன் மட்டும் நின்று விடாமல், சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டி, பல்வேறு தளங்களில் செயல்பட்டவர்.

மார்க்சிசம் - லெனினிசக் கொள்கை மீது பற்றுக் கொண்டவர். அது வலுப்பெற வேண்டும் என அக்கறை காட்டிய செயல்பாட்டாளர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து உறவில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. திரையுலகின் தனி முகமாக திகழ்ந்து வந்த ராஜேஷ் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாதது. அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.