Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தி.மலை அருகே நள்ளிரவில் ஆவின் டீக்கடை தீ வைத்து எரிப்பு?: சிலிண்டர் வெடித்ததால் பொதுமக்கள் பீதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நள்ளிரவில் ஆவின் டீக்கடையை யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் சிலிண்டர் வெடித்ததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கோயில்மாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ெஜமினிகணேசன். இவர் தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். இரவு சுமார் 11 மணியளவில் இவரது டீக்கடை தீப்பற்றி எரிவதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதை அவர்கள் ஜெமினிகணேசனுக்கு தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது கடை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். அப்போது டீக்கடையில் இருந்த சிலிண்டரும் வெடித்ததால் தீ மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதனால் அருகே உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. ஆனால் டீக்கடையில் இருந்த பாய்லர், 3 பிரிட்ஜ், 1 சர்க்கரை மூட்டை, 2 சிலிண்டர், பிஸ்கட், பேக்கரி பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், யாராவது மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தார்களா, அல்லது எப்படி தீ விபத்து ஏற்பட்டது என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடையின் அருகே ஏதேனும் சிசிடிவி கேமரா உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். டீக்கடையில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர்.