புதுடெல்லி: மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ நரேஷ் பால்யானை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். டெல்லி ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ நரேஷ் பால்யான் என்பவரும் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் நந்து என்றும் அழைக்கப்படும் ரவுடி கபில் சாங்வான் என்பவருக்கும் இடையிலான உரையாடலின் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, அவரிடம் இருந்த பணம் பறித்து தருமாறு ரவுடி கபில் சாங்வானிடம் எம்எல்ஏ நரேஷ் பால்யான் பேசியுள்ளார்.
இந்த ஆடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்த டெல்லி தனிப்படை போலீசார், அந்த ஆடியோவில் எம்எல்ஏவும், ரவுடியும் பேசியதை உறுதி செய்தனர். அதையடுத்து எம்எல்ஏ நரேஷ் பால்யான் மீது மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ெதாடர்ந்து நேற்றிரவு எம்எல்ஏ நரேஷ் பால்யானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா தலைவர் கூறுகையில், ‘எம்எல்ஏ நரேஷ் பால்யா ரவுடி ஒருவரின் உதவியுடன் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டார். ஆம்ஆத்மி கட்சியானது குண்டர்களின் கட்சியாக மாறிவிட்டது. சாமானிய மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கிறார்கள். கடந்தாண்டு முதல் எம்எல்ஏ மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்’ என்றார்.


