Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மின் பழுதை சரி செய்யும்போது ஊழியர்கள் உயிரிழப்பதை தடுக்க சென்சார் டிடெக்டர் பொருத்தப்பட்ட ஹெல்மெட்: மின்வாரியம் அசத்தல்

தாம்பரம்: மின் பழுதை சரிசெய்யும்போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மின்வாரிய ஊழியர்களுக்கு நவீன கருவி பொருத்திய ஹெல்மெட்களை மின்வாரியம் வழங்கியுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களில் ஏறி பணிபுரியும்போது, விபத்தில் சிக்குவதை தவிர்த்து அவர்களை பாதுகாக்க வோல்டேஜ் சென்சார் டிடெக்டர் என்ற நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த, கருவி மின்காந்த அலை மற்றும் சென்சார் மூலம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், மின்கம்பத்தில் ஏறும் ஊழியர்கள், தங்களது தலையில் அணிந்துள்ள ஹெல்மெட் அல்லது கையில் இந்த கருவியை பொருத்திக்கொள்ள வேண்டும்.

கம்பத்தின் உயரத்திற்கு செல்லும்போது சுமார் 3 அடி தூரத்தில் மின் சப்ளை இருப்பது, அந்த கருவியில் உள்ள சென்சார் மூலம் தெரியவந்து விடும். உடனே எச்சரிக்கை ஒளி, ஒலி எழுப்பும். அப்போது, மின் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு மின் விபத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளலாம். தற்போது ஒவ்வொரு பகுதிகளாக மின்வாரிய ஊழியர்களுக்கு வோல்டேஜ் சென்சார் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்ட ஹெல்மெட் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மழை, காற்று, புயல் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் மின் தடைகளை விரைந்து சரி செய்வதற்காக, மின் கம்பங்களில் ஏறி பழுதுகளை சரிசெய்யும் மின்வாரிய ஊழியர்களின் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.

இதனால், பல்லாவரம் மின் கோட்டத்தில் உள்ள 10 பிரிவு அலுவலகங்களுக்கும் தலா 5 என மொத்தம் 50 வோல்டேஜ் சென்சார் டிடெக்டர் கருவிகள் மற்றும் ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளில் மின்வாரிய ஊழியர்களுக்கான நவீன கருவி பொருத்திய ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், பல்லாவரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் கலந்துகொண்டு, மின் ஊழியர்களுக்கு நவீன கருவி பொருத்திய ஹெல்மெட்டுகளை வழங்கினார்.

பின்னர், மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ் பேசுகையில், ‘‘மின் கம்பங்களில் ஏறும் மின் ஊழியர்கள் தவறுதலாக அல்லது கவனக்குறைவாக மின் சப்ளை உள்ள பகுதியில் கை வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக வோல்டேஜ் சென்சார் டிடெக்டர் கருவி பொருத்திய ஹெல்மெட் மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒருபகுதியாக பல்லாவரம் கோட்ட மின்வாரியை ஊழியர்களுக்கும் அந்த நவீன ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களில் ஏறும்போது கை கடிகாரம் போல இதனை கட்டிக் கொள்ளலாம். மின்கம்பத்தில் சப்ளை இருந்தால் 3 அடிக்கு முன்னதாகவே அந்த கருவியில் இருந்து ஒளியுடன் ஒலி வந்து எச்சரிக்கை விடுக்கும். அவ்வாறு வரும் எச்சரிக்கை மூலம் மின்வாரிய ஊழியர்கள் சுதாரித்துக்கொண்டு கீழே இறங்கி விடலாம். இதன் மூலம் அவர்களது உயிர் பாதுகாக்கப்படும். இந்த நவீன கருவியை மின்வாரிய ஊழியர்கள் தாங்கள் பணிகளில் இருக்கும்போது கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இந்த கருவியை பயன்படுத்தாமல் அலட்சியமாக செயல்படும் மின்வாரிய ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.