Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை புதுச்சேரியில் பள்ளியை சூறையாடிய மக்கள்: ஓட ஓட ஆசிரியருக்கு தர்மஅடி; 7 மணி நேரம் சாலை மறியல்; 18 கிராம மீனவர்கள் ஸ்டிரைக்; சீல் வைக்க கலெக்டர் உத்தரவு

தவளக்குப்பம்: புதுச்சேரியில் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை ஓட ஓட தாக்கிய மக்கள், பள்ளியை அடித்து நொறுக்கினர். பள்ளி நிர்வாகம் மீதும், ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி 7 மணி நேரம் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 18 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் பள்ளிக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி, உடல்நிலை பாதிக்கப்படவே, மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

அப்போது பள்ளியில் அறிவியல் ஆசிரியர் மணிகண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவரவே அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் குழந்தைகள் நல குழுவுக்கும், தவளக்குப்பம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் தனியார் பள்ளியை முற்றுகையிட திரண்டனர். அப்போது அங்கிருந்த ஆசிரியர் மணிகண்டனை விரட்டி விரட்டி தாக்கிய நிலையில், போலீசாரோ பெற்றோரை தடுத்து அப்புறப்படுத்தி ஆசிரியரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பள்ளியில் இருந்த கண்ணாடி, மேஜை, கணினி அறை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுச்சேரி- கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சபாநாயகர் செல்வம், போலீஸ் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பள்ளி தாளாளர் ராமு, ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றச் சம்பவத்தை தட்டிக்கேட்ட மாணவியின் பெற்றோரை தாக்கிய உதவி ஆய்வாளர் சண்முக சத்யா மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோஷமிட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயன்ற சபாநாயகர் மற்றும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மணி நேரமாக தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பள்ளி தாளாளர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு சீல் வைக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதன்பிறகு தவளக்குப்பம் போலீசார் முதலியார் பேட்டையை சேர்ந்த ஆசிரியர் மணிகண்டன் (25) மீது நள்ளிரவில் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சிறுமி சம்பவத்தை கண்டித்து 18 மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கலெக்டரின் உத்தரவுக்கிணங்க அந்த பள்ளியில் நேற்று நடக்கவிருந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ரத்து செய்யப்பட்டது. பள்ளி நுழைவாயில் பூட்டுபோட்டு மூடப்பட்டதால் இத்தேர்வில் பங்கேற்க முடியாமல் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஏமாற்றமடைந்தனர். அவர்களுக்கு மாற்றுத் தேதியில் செய்முறை தேர்வு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தாலும் எந்த நேரத்திலும் அதிகாரிகள் குழு பள்ளிக்கு சீல் வைக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

* பஸ்சில் மறைந்திருந்த ஆசிரியரை அடையாளம் காட்டிய சிறுமி

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை அடையாளம் காட்டுவதற்காக நேற்று முன்தினம் பள்ளிக்கு சிறுமியுடன் பெற்றோர், போலீசார், சைல்டு லைன் நிர்வாகிகள் சென்றுள்ளனர். இதை பார்த்தவுடன் ஆசிரியர் மணிகண்டன் யாரிடமும் சிக்காமல் மறைந்துள்ளார். சிறிது நேரத்தில் தனி அறையில் பள்ளியில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்களை வரவழைத்து சிறுமியிடம் அடையாளம் காண்பிக்குமாறு கூறியுள்ளனர். அதில் மணிகண்டன் மட்டும் இல்லாததால் மற்ற ஆசிரியர்கள் யாரையும் சிறுமி காண்பிக்கவில்லை. பிறகு, பள்ளி பேருந்தில் மறைந்திருந்த ஆசிரியர் மணிகண்டனை சிறுமி பார்த்தவுடன் போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளளார்.

* நோட்டு புத்தகத்தில் ஆபாச வார்த்தைகள்

போக்சோவில் சிக்கிய அறிவியல் ஆசிரியரான மணிகண்டன், பிளஸ்1, பிளஸ்2 பயிலும் மாணவிகளின் நோட்டு புத்தகங்களில் சில ஆபாச வார்த்தைகளை எழுதியுள்ளார். அதில் உடல் நலம் விசாரிப்பதுபோல் மாத்திரை சாப்பிட்டாயா? என்றும் மாதவிடாய் குறித்தும் பாலியல் ரீதியாகவும் வார்த்தைகளை எழுதி வந்துள்ளார். இது தற்போது பெற்ேறார்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர் தங்களது குழந்தைகளின் நோட்டு, புத்தகங்களையும் வாங்கி ஆய்வு செய்து வருகின்றனர்.