Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திறமைகளை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்!

நாம் எந்த ஒரு செயலிலும் உரிய முயற்சி செய்யாமல் விட்டுவிட்டு, எனக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறோம். ஆனால், அது சரியல்ல! செய்த முயற்சி வெற்றி அடையவில்லை என்றால், நீங்கள் தோற்றுப் போனதாகவோ... உங்களுக்கு அவ்வளவுதான் திறமை என்றோ ஒரு முடிவுக்கு வந்து, மனதளவில் முடங்கி விடக்கூடாது. நமக்குள்ளே இருக்கிற ஆற்றலை அளவிட முடியாது.

இங்கிலாந்து நாட்டில் பிறந்து உலகக் கவிஞன் என்று போற்றப்பட்டவர் பைரன். இந்த பைரனுக்கு நீண்டகால கனவு ஒன்று இருந்தது. பள்ளிப் படிப்பை முடித்து பின்பு அந்த நாட்டில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தார். ஒருநாள் அவருடைய அப்பா அவரை அழைத்து ‘‘பைரன் அடுத்தது என்ன செய்யப் போகிறாய்?’’ என்றார். அதற்கு பைரன் ‘‘யேல் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும், அதுதான் என்னுடைய இப்போதைய ஆசை’’ என்றார்.

‘‘உனக்கு படிப்பின்மீது அவ்வளவு பிரியமா’’ என்றார்.‘‘ ஆமாம்’’ என்றார் பைரன். அதற்கு தந்தை நம் குடும்பத்தில் வசதி இல்லை.இனி நீ படிப்பது என்பது முடியாத ஒன்று என்று சொல்லிவிட்டார்.அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அப்படியே திரும்பிப் பார்க்காமல் ஓடத் தொடங்கினான். வாழ்க்கையே முடிந்துபோனது போல் இருந்தது பைரனுக்கு. எத்தனை கனவுக்கோட்டைகளைக் கட்டியிருந்தோம். எல்லாம் ஒரு நொடியில் சரிந்து விட்டதே என்று சொல்லிக்கொண்டு காட்டை அடைந்து மரங்களுக்கு இடையே ஓடிக்கொண்டிருந்தான்.

அந்தக் காட்டில் யாரும் இல்லை, தரையில் அமர்ந்து சத்தம் போட்டு அழத் தொடங்கினான். பின்னர் எழுந்து நின்றான். தன் காலுக்கு அருகே இருந்த ஒரு சிறு கல்லை ஓங்கி எட்டி உதைத்தான்.அதன் கீழே பாதுகாப்புக்காக ஒட்டியிருந்த ஒரு பூச்சி பறந்துபோனது. திடீரென்று அவன் மனதில் ஒரு பாடலின் வரி தோன்றியது. மீண்டும் ஓடத் தொடங்கினான். இந்த முறை உற்சாகத்துடன் மரங்களை சுற்றிச்சுற்றி ஓடினான். நீரோடைகள் வழியாக நடந்து சென்றான். அமைதியான காட்டில் உற்சாகமாக குரல் எழுப்பினான். இவனது குரலுக்குப் பல்வேறு பறவைகள்,பல்வேறு விதமான ஒலிகளை பதிலுக்கு வழங்கின. சத்தம் போட்டுக் கத்தினான் பைரன். பறவைகளே இனி நான் கவிதை எழுத போகிறேன் என்று.

தனக்கு படிப்பு கிடைக்கவில்லை என்றபோதும் தன்னுடைய ஆர்வத்தையும்,விருப்பத்தையும் தன்னிடமுள்ள திறமையின் மீது ஏற்படுத்தியவர்தான் இங்கிலாந்து நாட்டின் சிறந்த கவிஞர் பைரன்.

எதைச் செய்தாலும் முழு மனதுடன், அதிகபட்ச உத்வேகத்துடன் தன்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வரும்போது வெற்றி நம்மை தேடி வருகிறது. அதுபோலத்தான் தன்னுடைய திறமையால் அனைவரையும் வியந்து பார்க்க வைத்த ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகிறேன்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரர்கள் என்றால் எலான் மஸ்க், பில்கேட்ஸ், ஜெஃப் பெசோஸ் போன்றவர்களை சொல்வோம். ஆனால், தன்னுடைய அதிபுத்திசாலித்தனம் மற்றும் கணிதத்தில் அதீத திறமையின் மூலம் பில்லியன் கணக்கில் டாலர்களை குவித்த ஒருவர் இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா? அவர்தான் ஜிம் சைமன்ஸ்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் 1938ஆம் ஆண்டு பிறந்த ஜிம் சைமன்ஸ், சிறுவயதிலிருந்தே கணிதப் பாடத்தில் ஆர்வம் கொண்ட மாணவராகத் திகழ்ந்தார். அவரது அதீத கணிதத் திறமையின் காரணமாக பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. எனினும், சைமன்ஸ் தன்னை கல்வி அளவில் மட்டுமே சுருக்கிக் கொள்ளவில்லை. பனிப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ, சைமன்ஸை பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தியது.தனது அற்புதமான கணிதத் திறமைகள் மூலம் கடினமான ‘கோட்’களைக் கூட உடைத்து, ஜிம் சைமன்ஸ் அமெரிக்கா பாதுகாப்புத் துறைக்கு பதற்றமான காலகட்டங்களில் பக்கபலமாக விளங்கினார்.

1968ல் சிஐஏ-வை விட்டு வெளியேறிய சைமன்ஸ், அதன் பிறகு, நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையின் தலைவரானார். பின்னர், தனது கவனத்தை பங்குச் சந்தையின் பக்கம் திருப்பினார். தனது 40வது வயதில், நியூயார்க்கில் மோனிமெட்ரிக்ஸ் என்ற நிதி மேலாண்மை நிறுவனத்தை நிறுவினார்.ஆரம்பத்தில், சைமன்ஸ் தனது கணித மூளையை நிதி உலகில் பயன்படுத்துவது குறித்து கருத்தில் கொள்ளவில்லை. எனினும், சந்தையின் போக்கை கணிக்க கணித மாதிரிகளை உருவாக்குவது சாத்தியம் என்பதை அவர் கண்டறிந்தார். எனவே,தான் சிஐஏ மற்றும் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் இருந்த காலகட்டத்தில் தனக்குப் பழக்கமான சில கணிதப் புலிகளை தன்னுடைய இந்த புதிய முயற்சியில் சேர்த்துக்கொண்டு மோனிமெட்ரிக்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார்.

குறுகிய காலத்திலேயே பல வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கிய மோனிமெட்ரிக்ஸ் நிறுவனத்தின் பெயர் ரெனேஸ்ஸான்ஸ் டெக்னாலஜிஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சைமன்ஸ் மற்றும் அவரது சகாக்களின் தொடர் உழைப்பின் காரணமாக, அவர்களின் கணித மாதிரிகள், பாரம்பரியப் பங்கு தேர்வு உத்திகளைப் பின்னுக்குத் தள்ளின.

1988ஆம் ஆண்டில் ஒரு மாற்றம் சார்ந்த உத்தியை சைமன்ஸ் கையில் எடுத்தார். தன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிக நடைமுறைகளையும் கணிதம் அடிப்படையில் மாற்ற முடிவு செய்தார்.இது ஒரு மிகப்பெரிய கேம்-சேஞ்சராக அமைந்தது. இந்த மாதிரிகளின் வெற்றி என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

புகழ்பெற்ற மெடாலியன் ஃபண்ட் (பிளாக்-பாக்ஸ் ஸ்ட்ரேடஜி ஃபண்ட்) பல தசாப்தங்களாக, கட்டணக் குறைப்புகளுக்குப் பிறகும் கூட, 30 சதவீதத்துக்கும் அதிகமான வருடாந்திர வருமானத்தைத் தொடர்ந்து வழங்கிவருகிறது. இதன் விளைவாக 2012-ல் சைமன்ஸின் நிறுவனம் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புச் சொத்தை நிர்வகித்தது.

1988 முதல் 2018 வரை ரெனேஸ்ஸான்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் லாபத்தை ஈட்டியிருந்தது. ஜிம் சைமன்ஸ் இந்த ஆண்டு மே மாதம் முடிந்தபோது அவரது சொத்து மதிப்பு 31 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பொருளாதார வெற்றியால் மட்டுமே ஜிம் சைமன்ஸ் புகழ்பெறவில்லை. உள்ளுணர்வு அடிப்படையில் இயங்கிவந்த ஒரு துறையில் கணித அறிவைப் பயன்படுத்தி புரட்சியை நிகழ்த்தியவர் ஜிம் சைமன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய வாழ்க்கை இன்றைய மாணவர்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால், திறன்களையும், திறமைகளையும் வளர்த்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுங்கள். அதுதான் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உங்களை உன்னதமானவர்களாக்கும். சாதனைகள்தான் வாழ்வின் பக்கங்களை வரலாறாக ஆக்கும்.