5.25 சதவீதமாக நீடிப்பு குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.25 சதவீதமாக நீடிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐயில் மாற்றம் இருக்காது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. இதன்படி நடப்பு மாதத்துக்கான கூட்டம் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் மாற்றமில்லை. இது 5.25 சதவீதமாக நீடிக்கிறது. உற்பத்தி அதிகரிப்பு, ஏற்றுமதி அதிகரிப்பு, உள்நாட்டு தேவைகள் போன்றவை காரணமாக நடப்பு நிதியாண்டுக்கான ஜிபிடி வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்பு 6.6 சதவீதம் என கணிக்கப்பட்டிருந்தது.
இதுபோல் நடப்பு நிதியாண்டுக்கான சில்லறை விலைப் பண வீக்கம் 5 சதவீதமாக இருக்கும். அதேநேரத்தில் எல் நினோ, கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம், உலகளாவிய பதற்ற சூழ்நிலைகள் மற்றும் வர்த்தக கொள்கை ஆகியவை பண வீக்கத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் காரணிகளாக இருக்கும். சர்வதேச சந்தையில் ஸ்திரத்தன்மை நிலவும் சூழ்நிலையிலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பு இருக்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
* பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு எப்போது?
தாள்களில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு காலப்போக்கில் நைந்து கிழிந்து விடுகிறது. எனவே, நீடித்து உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, மும்பையில் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டத்துக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘வரும் நிதியாண்டு துவக்கத்தில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டினை புழக்கத்தில் விட இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.


