Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சோளிங்கர் அருகே கோர்ட் உத்தரவுடன் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றவருக்கு கொலை மிரட்டல்

*நடவடிக்கை கோரி குறைதீர்வு கூட்டத்தில் மனு

ராணிப்பேட்டை : சோளிங்கர் அருகே கோர்ட் உத்தரவுடன் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றவர்களுக்கு கொலை மிரட்டல்விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் 403 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கலெக்டர் சந்திரகலா கேட்டறிந்தார்.

மேலும் டி.ஆர்.ஓ சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைய நம்பி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, கலால் உதவி ஆணையர் ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் ஆகியோரும் பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

கூட்டத்தில் சோளிங்கர் வட்டம், புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட முகவரில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

நீதிபதிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். வருவாய் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றால், தனியார் நிறுவன ஊழியர்கள் என்னை ஆபாசமாக மிரட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

ஆற்காடு நகர புஷ்ப வியாபாரிகள் நலச்சங்க தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் எங்கள் சங்க உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பூக்கடை வைத்து நடத்தி வந்தோம்.

கடந்த மார்ச் மாதம் முதல் புதிய பேருந்து நிலையம் கட்டுவதால் எங்கள் கடை சாவியை பெற்றுக்கொண்டு ஒரு ஆண்டு காலத்தில் கடைகளை கட்டி உங்களுக்கே ஒப்படைக்கின்றோம் என்றனர். தற்காலிகமாக தனியார் மண்டபம் அருகே கடை அமைக்க ஏற்பாடு செய்தனர். அங்கு பொதுமக்கள் நடமாட்டம் குறைவால் வியாபாரம் இல்லை. எனவே, வேலூர் செல்லும் பிரதான சாலையில் கடைகளுக்கு முன்பாக பூக்கடைகளை நடத்தி வந்தோம்.

அங்கு நகராட்சி அதிகாரிகள் கடைகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு ஏற்கனவே நடத்தி வந்த கடைகளை நகராட்சி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்து மக்கள் கட்சியின் வேலூர் கோட்ட தலைவர் எஸ்.கே.மோகன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அம்பேத்கரின் முழு உருவ சிலையை வாலாஜா ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்க வேண்டும்.

அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு தினம், சட்ட தினம் ஆகிய நாட்களில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் அவரின் புகழை போற்றி வணங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,500 வீதம் ரூ.13 ஆயிரம் மதிப்பீட்டிலான தையல் இயந்திரங்களை கலெக்டர் சந்திரகலா வழங்கினார்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நலவாரிய திட்டத்தின் கீழ் 35 நபர்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சங்கு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட ரூ.8 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்திரகலா வழங்கினார்.

மேலும் கூட்டத்தில் காற்று மெத்தை வேண்டி மனு அளித்த நபருக்கு உடனடியாக ரூ.6 ஆயிரம் மதிப்பில் காற்று மெத்தை மற்றும் தேசிய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தியான புற உலக சிந்தனையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க சட்டப்பூர்வமான பாதுகாவலர் நியமன சான்று 15 நபர்களுக்கு கலெக்டர் சந்திரகலா வழங்கினார்.